பிரதமர் நரேந்திர மோடி நேற்று தனது 65-வது பிறந்த நாளை கொண்டாடினார். குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் உட்பட பல்வேறு தலைவர்கள் அரசியல் சார்பின்றி மோடிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
பிரதமர் நரேந்திர மோடி நேற்று 65-வது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி வாழ்த்து தெரிவித்தார். அவர் கூறுகையில், ‘‘செயலாற்றல் மிகுந்தவர் மோடி. கடந்த ஓராண்டில் பிரதமர் மோடிக்கும் நாட்டுக்கும் மிகச் சிறந்த முக்கியமான ஆண்டாக இருந்தது. நமது மிகச்சிறந்த இந்திய நாட்டை 15 மாதங்களாக வழிநடத்திய நிலையில் இந்த சிறப்பான நாள் (பிறந்த நாள்) வந்துள்ளது. உங்கள் கடின உழைப்பு, செயலாற்றல் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு உள்ளது. அதனால் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் உங்களை பாராட்டுகின்றனர். உங்கள் வாழ்வில் நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சியுடன் பல ஆண்டுகள் இந்த நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘‘பிரதமர் மோடிஜிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். சிறந்த ஆரோக்கியத்துடன் நீடூழி வாழ வாழ்த்துகிறேன்’’ என்று தெரி வித்துள்ளார். (கடந்த ஜூன் 19-ம் தேதி ராகுல் காந்தி தனது 45-வது பிறந்த நாளை கொண்டாடினார். அப்போது, மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். அதற்கு நன்றி தெரிவித்திருந்தார் ராகுல்.) காங்கிரஸ் எம்.பி. சசிதரூர், டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஓமர் அப்துல்லா உட்பட பல்வேறு தலைவர்களும் மோடிக்கு வாழ்த்து தெரிவித் தனர்.
365 கிலோ லட்டு
மோடி பிறந்த நாளை, ‘தூய்மை தினமாக’ சுலாப் இன்டர்நேஷனல் அமைப்பு நேற்று கொண்டாடியது. இதை முன்னிட்டு 365 கிலோ எடையில் சிறப்பு லட்டு தயாரிக்கப்பட்டிருந்தது. டெல்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் அந்த லட்டை மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா விநிேயாகித்து பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்தார்.