காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் கட்சித் தலைவர் சோனியா காந்தியின் பதவிக் காலம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் பேசிய சோனியா, பிரதமர் நரேந்திர மோடி மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:
நிலம் கையகப்படுத்தும் மசோதாவை எதிர்த்து ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் தொண்டர்கள் நாடு முழுவதும் போராட்டங்களை நடத்தினர். இதில் பல்வேறு கட்சிகளும் சமூக அமைப்புகளும் பங்கேற்றன. இதன் காரணமாக நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டத்தை மத்திய அரசு கைவிட்டுள்ளது.
தொழிலாளர் சட்டம், மகளிர், குழந்தைகள் மேம்பாடு சட்டம், தகவல் அறியும் உரிமைச் சட்டம், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் ஆகியவற்றை நீர்த்துப் போகச் செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. இதை கண்டித்து போராட்டங்கள் தீவிரப்படுத்தப்படும்.
மக்களவைத் தேர்தலின்போது பிரதமர் நரேந்திர மோடி வாக்குறுதி களை அள்ளி வீசினார். அவை அனைத்தும் காற்றில் பறக்கின்றன. அடுக்குமொழி, அலங்கார பேச்சில் வல்லமை காட்டும் மோடி, செயலில் மட்டும் கோட்டை விடுகிறார்.
பாகிஸ்தான் தாக்குதலால் காஷ்மீர் எல்லைப் பகுதிகளில் பாதுகாப்புப்படை வீரர்களும் பொதுமக்களும் பாதிக்கப்படு கிறார்கள். ஆனால் அந்த நாட்டுக்கு தகுந்த பதிலடி தர முடியாமல் மத்திய அரசு திணறி வருகிறது.
மறைந்த முன்னாள் பிரதமர் நேருவின் புகழை அழிக்க அரசு முயற்சிக்கிறது. அதற்காக வரலாற்றை மாற்றி எழுதவும் துணிந்துள்ளது. இப்போதைய நிலையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பே மத்திய அரசை கட்டுப்படுத்தி இயக்கி வருகிறது. கடந்த வாரம் பிரதமரும் மத்திய அமைச்சர்களும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தியது இதை உறுதிப்படுத்துகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடந்த 1998 முதல் 17 ஆண்டுகள் தலைவராகப் பதவி வகித்து வருகிறார். அவரது பதவிக் காலம் வரும் டிசம்பருடன் நிறைவடைகிறது.
இதையொட்டி கட்சியின் புதிய தலைவராக ராகுல் காந்தி அறிவிக் கப்படுவார் என்று பரவலாகப் பேசப்பட்டது. ஆனால் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டத் தில் இதற்கு முற்றுப் புள்ளி வைக் கப்பட்டது. சோனியா காந்தியே மேலும் ஓராண்டுக்கு தலை வராக நீடிப்பார் என்று கூட்டத் தில் அறிவிக்கப்பட்டது. இதன் படி உட்கட்சித் தேர்தல் ஓராண் டுக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
தற்போது 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை உட்கட்சித் தேர்தல் நடத்தப்படுகிறது. இனிமேல் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்த ஒப்புதல் வழங்கப்பட்டது.
சுமார் மூன்று மணி நேரம் நடைபெற்ற காரிய கமிட்டி கூட்டத்தில் ஜி.எஸ்.டி. மசோதா குறித்து முன்னாள் அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஆனந்த் சர்மா ஆகியோர் விளக்கினர். குஜராத்தில் நடைபெறும் படேல் சமூகத்தினரின் போராட்டம், வெங்காய விலை உயர்வு, பணவீக்கம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டன.