பிரதிநிதித்துவப் படம் 
இந்தியா

கோவிட்-19; பணியின் போது உயிரிழந்த தூய்மைப் பணியாளர்கள் பற்றிய தகவல்கள்  இல்லை: மத்திய அரசு

செய்திப்பிரிவு

கோவிட்-19 பெருந்தொற்றின் போது பணியின் போது உயிரிழந்த தூய்மைப் பணியாளர்கள் பற்றிய தகவல்கள் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மாநிலங்களவை உறுப்பினர்களின் கேள்விகளுக்கு எழுத்து மூலம் பதிலளித்த மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் ரத்தன் லால் கட்டாரியா கூறியதாவது:

மாற்றுப் பாலினத்தவர்கள் (உரிமைகள் பாதுகாப்பு) சட்டம், 2019-ஐ, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் இயற்றியுள்ளது.

இந்த சட்டத்தின் படி, மாற்றுப் பாலினத்தவர்களுக்கான பல்வேறு கொள்கைகளின் தாக்கம் குறித்து மாற்றுப் பாலினத்தவர்களுக்கான தேசியக் குழு மதிப்பிடும்.

மருத்துவமனைகளும் சிகிச்சை மையங்களும் மாநிலப் பட்டியலில் வருவதால், கோவிட்-19 பெருந்தொற்றின் போது பணியின் காரணமாக உயிரிழந்த தூய்மைப் பணியாளர்கள் பற்றிய தகவல்கள் மத்திய அரசிடம் இல்லை.

ஆனால், தொற்றுத் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக் குழுக்களை அமைக்குமாறு மாநிலங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன. சுகாதாரப் பணியாளர்களின் உடல் நிலையைக் கண்காணிப்பதற்காக ஒரு அலுவலரை மருத்துவமனைகள் நியமிக்க வேண்டும்.

மருத்துவமனைகளில் கோவிட் தொடர்புடைய மற்றும் கோவிட் தொடர்பில்லா பகுதிகளின் மேலாண்மை குறித்த அறிவிக்கை ஒன்றை 2020 ஜூன் 18 அன்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டது.

முதியோர் இல்லங்களை நடத்தும் முகமைகளுக்கு பெருந்தொற்றின் காரணமாக முன்பணம் வழங்க மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் முடிவெடுத்தது. 2020-21-ஆம் ஆண்டில் இது வரை ரூ 83.47 கோடி ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டது.

முதியோர்களுக்கான தேசிய செயல் திட்டத்தையும் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது.

SCROLL FOR NEXT