இந்தியா

‘‘புதிய உயரங்களுக்கு கொண்டு செல்லும் வாய்ப்பை எதிர்நோக்குகிறேன்’’ - ஜப்பான் புதிய பிரதமருக்கு பிரதமர் மோடி வாழ்த்து

செய்திப்பிரிவு

ஜப்பானின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள யோஷிஹைட் சுகாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

ஜப்பான் பிரதமராகப் பதவி வகித்து வந்த ஷின்சோ அபே, சில ஆண்டுகளாக குடல் பாதிப்பு காரணமாக அவதிப்பட்டு வருகிறார். இரண்டு முறை மருத்துவப் பரிசோதனைகளுக்காக மருத்துவமனைக்குச் சென்று வந்த நிலையில், ஷின்சோ அபே காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பதாகக் கூறப்பட்டது.

இந்நிலையில் உடல் நிலையைக் காரணம் காட்டி பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக ஷின்சோ அபே அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து ஜப்பானின் ஆளும் கட்சியான லிபரல் டெமாக்ரடிக் கட்சி, அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான பொதுக்குழுவை செப்டம்பர் 1-ம் தேதி கூட்டியது. இதனைத் தொடர்ந்து கட்சியின் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு நடத்தப்பட்டது.

இதில் ஷின்சோ அபேவின் அமைச்சரவையில் மூத்த அமைச்சராக இருக்கும் யோஷிஹைட் சுகா சுமார் 377 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

இந்த நிலையில் யோஷிஹைட் சுகாவைப் பிரதமராகத் தேர்வு செய்து அந்நாட்டு நாடாளுமன்றம் இன்று (புதன்கிழமை) அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. விரைவில் சுகா பதவி ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜப்பானின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள யோஷிஹைட் சுகாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் பகிர்ந்துள்ள ட்விட்டர் பதிவில், “ஜப்பானின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள யோஷிஹைட் சுகாவுக்கு உளமார்ந்த வாழ்த்துகள். நமது சிறப்பான உத்திபூர்வ மற்றும் உலகளாவிய கூட்டிணைவை, நாம் இருவரும் சேர்ந்து புதிய உயரங்களுக்கு கொண்டு செல்லும் வாய்ப்பை எதிர்நோக்குகிறேன்” என்று கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT