பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர்ந்துள்ளார்கள். அதிலும் தென் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பலர் இணைந்துள்ளார்கள் என்று மத்திய அரசுக்குத் தகவல் கிடைத்துள்ளது என்று மாநிலங்களவையில் மத்திய உள்துறை இணை அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி தெரிவித்தார்.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி பதில் அளித்துப் பேசியதாவது:
''தெலங்கானா, கேரளா, ஆந்திரா, கர்நாடகம், தமிழகம் ஆகியவற்றில் ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் செயல்பாடுகள் இருப்பதாக 17 வழக்குகளை தேசிய விசாரணை முகமை பதிவு செய்து, இதுவரை 122 பேரைக் கைது செய்துள்ளது.
பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தனிநபர்கள், குறிப்பாக தென்மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் இணைந்துள்ளார்கள் என்று மத்திய அரசுக்கும், மாநில பாதுகாப்பு அமைப்புகளுக்கும் தகவல் அளிக்கப்பட்டது.
ஐஎஸ் தீவிரவாத அமைப்பு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா, மகாராஷ்டிரா, தமிழகம், மேற்கு வங்கம், ராஜஸ்தான், பிஹார், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் தீவிரமான செயல்பாட்டில் இருப்பாதகத் தகவல் கிடைத்துள்ளது.
ஐஎஸ் தீவிரவாத அமைப்பு தனது கொள்கைகளையும், சித்தாந்தங்களையும் பரப்ப பல்வேறு சமூக வலைதளங்களையும், சமூக ஊடகங்களையும் பயன்படுத்துகிறது. சைபர் பிரிவு அதிகாரிகள் மிகவும் தீவிரமாக இதைக் கண்காணித்து வருகின்றனர். கவலை தரக்கூடிய சம்பவங்கள் நடந்தால், சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவர்களுக்கு எவ்வாறு பணம் கிடைக்கிறது, யார் மூலம் பணம் தரப்படுகிறது, எங்கிருந்து வருகிறது என்பது குறித்தும், தீவிரவாதச் செயல்களில் ஏதேனும் ஈடுபடுகிறார்களா என்பது குறித்தும் அரசிடம் தகவல் இருக்கிறது.
ஐஎஸ் தீவிரவாத அமைப்பு, ஈராக் லெவன்ட் ஐஎஸ், இஸ்லாமிக் ஸ்டேட் ஆப் ஈராக் அன்ட் சிரியா, டாயிஷ், ஐஎஸ்கேபி, ஐஎஸ்ஐஎஸ் விலாயத் கோரஸன், ஐஎஸ்ஐஎஸ் கே ஆகியவை தீவிரவாத அமைப்புகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த அமைப்புகள் சட்டவிரோத தடைச் சட்டத்தின் கீழ் வைக்கப்பட்டுள்ளன''.
இவ்வாறு கிஷன் ரெட்டி தெரிவித்தார்.