மத்தியப் பிரதேசத்தில் பசுமாட்டுக் கறி விற்றார் என்ற குற்றம்சாட்டில் 39 வயது நபர் ஒருவரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இந்தூர் போலீஸார் கைது செய்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக போலீஸ் புகாரை வைத்து ஞாயிறன்று மாவட்ட நிர்வாகம் குற்றம் சாட்டப்பட்டவரை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டது என்று கூடுதல் சூப்பரிண்டெண்டண்ட் மகேஷ் சந்திர ஜெய்ன் என்ற போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.
இந்தூர் நகரில் ராவ்ஜி பஜார் காவல் நிலைய சரகத்துக்குள் தெற்கு தோடா பகுதியில் அந்த நபர் பீஃப் விற்றுக் கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டார்.
யாரோ துப்புக் கொடுக்க சனிக்கிழமையன்ரு போலீஸார் இறைச்சிக் கடையில் ரெய்டு நடத்தினர். அங்கிருந்து அதிக அளவில் மாட்டிறைச்சியை அவர்கள் கைப்பற்றியதாக ராவ்ஜி பஜார் போலீஸ் நிலைய துணை ஆய்வாளர் சீமா தாகத் கூறினார்.
ஆட்டுக்கறி விற்கும் கடையில் மாட்டுக்கறியை அவர் விற்றதாக குற்றம்சாட்டப்பட்டது.
எங்கிருந்து அவர் பசு இறைச்சியை பெற்றார், யாருக்கு விற்றார் என்பது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.
இதற்கு முன்னரும் கூட மத்தியப் பிரதேச பசுவதைத் தடுப்புச்சட்டத்தின் கீழ் ஏற்கெனவே இவர் மீது வழக்கு இருப்பதாகவும் அவை நிலுவயில் உள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பாக காங்கிரஸ் ஆட்சியிலும் 2019-ல் தேசியப் பாதுகாப்புச் சட்டம் மாட்டிறைச்சி விவகாரத்தின் போது கடைப்பிடிக்கப்பட்டது, ஆனால் அப்போது காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங்கூறிய போது, “போலீஸார் தான் என்ன பிரிவில் வழக்கு தொடர வேண்டும் என்பதை முடிவு செய்கின்றனர், ஆனால் இதில் போய் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை கையிலெடுப்பது தேவையற்றதே” என்று கூறியது குறிப்பிடத்தக்கது.