தமிழகக் காங்கிரஸ் எம்.பியாக இருந்த வசந்தகுமார் உள்ளிட்ட 13 பேர் மறைவிற்கு நாடளுமன்றத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதற்காக இன்று மழைக்காலக் கூட்டத்தொடர் கூடியதும் மக்களவை ஒரு மணி நேரத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது.
தமிழகத்தின் கன்னியாகுமரி தொகுதி எம்.பியான வசந்தகுமார் கடந்த ஆகஸ்ட் 28 அன்று கரோனா தொற்றால் மறைந்தார். இவரைபோல், நாடாளுமன்ற முன்னாள் எம்.பிக்களும் கடந்த சில மாதங்களில் மறைந்தனர்.
இதில், முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, மத்தியபிரதேச மாநில ஆளுநரான லால்ஜி டண்டண், சத்தீஸ்கரின் முன்னாள் முதல்வரான அஜீத்ஜோகி, உபி மாநில அமைச்சர்களான சேத்தன் சவுகான் மற்றும் கமல் ராணி ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
இப்படியலில் கடைசியாக இருதினங்களுக்கு முன் கரோனாவால் பலியான முன்னாள் மத்திய அமைச்சரான ரகுவர்ன்ஸ் பிரசாத்தும் உள்ளார். இவர்கள் அனைவருக்காகவும், பிரபல கர்நாடக பாடகரான பண்டிட் ஜெஸ்ராஜ் மறைவிற்கும் இன்று மக்களவையில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதையடுத்து அவையை ஒருமணி நேரம் மட்டும் ஒத்தி வைக்கப்பட்டது இதுபோல், மறைந்த எம்.பிக்களுக்கான அஞ்சலி செலுத்திய பின் அந்த நாள் முழுவதிலும் கூட்டத்தொடரை ஒத்தி வைப்பது வழக்கமாக இருந்தது.
நேரமின்மை காரணமாக கடந்த பட்ஜெட் கூட்டத்தொடர் முத இம்முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டது. இதன்படி, முதல்நாளில் அஞ்சலிக்கு பின் ஒருமணி நேரம் மட்டும் மக்களவை ஒத்தி வைக்கப்படுகிறது.
அந்தவகையில், கரோனா பரவல் காலத்தில் முதன்முறையாகக் கூடிய மக்களவை இன்று அஞ்சலி
செலுத்திய ஒரு மணி நேரத்திற்கு பின் மீண்டும் கூடியது. நாளை முதல் மதியம் 3.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை மக்களவை கூடவிருக்கிறது.