நரம்புகளின் ஆழத்தில் ரத்தம் உறைதலைத் தடுக்கும் கருவி உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் குறைவான செலவில் உயிருக்கு ஆபத்தான நிலைமையை தடுத்து நோயாளியை காப்பாற்ற முடியும்.
இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் தன்னாட்சி பெற்ற அமைப்பான திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீ சித்திர திருநாள் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் குழு ஒன்று நரம்புகளின் ஆழத்தில் ரத்தம் உறைதலைத் தடுக்கும் கருவியை உள்நாட்டிலேயே உருவாக்கியுள்ளது.
இதன் மூலம் உயிருக்கு ஆபத்தான நிலைமைகளை, குறைவான செலவில் எதிர்கொள்ளலாம். நரம்புகளின் ஆழத்தில், வழக்கமாக கால்களில் ஏற்படும் ரத்த உறைதல் உயிருக்கே ஆபத்து விளைவிக்கக் கூடியதாகும்.
நீண்ட நாட்களாக நடக்க முடியாமல் இருக்கும் நோயாளிகள், படுக்கையிலேயே இருப்பவர்கள், அறுவை சிகிச்சைக்குப் பின் நடக்க முடியாமல் இருப்பவர்கள், கால் முடக்கத்தால் அவதிப்படுபவர்கள், வலி, வீக்கம் மற்றும் இதர பாதிப்புகளை உடையவர்களுக்கு இந்த கருவி நிவாரணமளிக்கும்.
ஜிதின் கிருஷ்ணன், பிஜு பெஞ்சமின் மற்றும் கொருத்து பி வர்கீஸ் ஆகியோர் அடங்கிய ஸ்ரீ சித்திர திருநாள் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் பொறியியல் வல்லுநர்கள் குழு இந்தக் கருவியை உருவாக்கி உள்ளது.