கோவிட்டில் இருந்து குணமடையும் அனைத்து நோயாளிகளின் தொடர் கவனிப்பு மற்றும் நலனுக்கு முழுமையான அணுகுமுறை தேவைப்படுவதால், கோவிட்-19க்கு பிந்தைய மேலாண்மை விதிமுறைகளை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
கோவிட்-19 தொற்றுக்குப் பிறகு உடல் சோர்வு, உடல் வலி, இருமல் தொண்டை வலி, மூச்சு விடுதலில் சிரமம் உள்ளிட்ட உபாதைகளை குணமடைந்த நோயாளிகள் தொடர்ந்து எதிர்கொள்வதாகக் கண்டறியப்பட்டுள்ளது
இவர்களின் நலனை உறுதிப்படுத்த முழுமையான அணுகுமுறை தேவைப்படுவதால் இந்த விதிமுறைகளை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
தனிப்பட்ட அளவில் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்தும், சமூக அளவில் பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்தும், மருத்துவமனையில் பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகள் குறித்தும் இதில் கூறப்பட்டுள்ளது.
தினசரி யோகாசனப் பயிற்சி, மூச்சுப் பயிற்சி, தியானம், காலை மற்றும் மாலை வேளைகளில் நடைபயிற்சி, சரிவிகித உணவு, போதுமான தூக்கம் மற்றும் ஓய்வு, புகைபிடித்தல் மற்றும் குடிப் பழக்கத்தை தவிர்த்தல் ஆகியன தனிநபர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளில் இங்கே வருகின்றன.