நாடாளுமன்ற மழைகாலக் கூட்டத்தொடருக்கு முன்பாக வழக்கமாக நடைபெறும் அனைத்துக் கட்சிக் கூட்டம் இந்தமுறை நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் வரும் 14-ம் தேதி தொடங்கி வார விடுமுறையின்றி, அக்டோபர் 1-ம் தேதிவரை நடக்கிறது. சனி, ஞாயிற்றுக் கிழமைகளிலும் இரு அவைகளும் இயங்கும்.
கரோனா வைரஸ் சூழலைக் கருத்தில் கொண்டு நாடாளுமன்றக் கூட்டம் காலை 9 மணி முதல் நண்பகல் 1 மணி வரையிலும், பின்னர் மாலை 3 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் நடக்கும். கூட்டத் தொடரில் கேள்வி நேரம் இல்லை. தனிநபர் மசோதாவும் இல்லை.
கேள்வி நேரத்துக்குப் பிந்தைய நேரமும் கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்படும் என்று மக்களவை, மாநிலங்களவைச் செயலாளர்கள் அறிவித்துள்ளனர்.
இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. கேள்வி நேரத்தை ரத்து செய்வது ஜனநாயகத்திற்கும் அரசியல் சட்டத்திற்கும் எதிரானது என எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன. எனினும் நாடாளுமன்ற மழைகாலக் கூட்டத்தொடரில் கேள்வி நேரம் இடம் பெறாது என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் நாடாளுமன்ற மழைகாலக் கூட்டத்தொடருக்கு முன்பாக வழக்கமாக நடைபெறும் அனைத்துக் கட்சிக் கூட்டம் இந்தமுறை நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக அலுவல் ஆய்வுக்குழு மட்டும் இன்று கூடி அவை நடவடிக்கைகள் தொடர்பாக முடிவெடுக்கிறது.
அலுவல் ஆய்வுக்குழுவில் இடம் பெற்றுள்ள மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, பாஜகவின் அர்ஜூன் ராம் மெக்வல், காங்கிரஸின் ஆதி ரஞ்சன் சவுத்திரி, ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைஸி உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்று அவை அலுவல்களை முடிவு செய்கின்றனர்.