காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி எம்.பி. : கோப்புப்படம் 
இந்தியா

அமெரிக்கா புறப்பட்டார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி: ராகுல் காந்தியும் உடன் சென்றார்

பிடிஐ


காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி வழக்கமான உடல்நலப் பரிசோதனைக்காக நேற்று அமெரி்க்கா புறப்பட்டுச் சென்றார். அவருடன் ராகுல் காந்தியும் சென்றுள்ளார்.

நாளை நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடங்க இருக்கும் நிலையில் கூட்டத் தொடர் பாதிப்பகுதி முடிந்தபின் சோனியா காந்தி பங்கேற்பார் என்றும், ராகுல் காந்தி ஒரு வாரத்தில் இந்தியா திரும்பிவிடுவார் என்றும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

காங்கிரஸ் கட்சியின் செயற்குழு மற்றும் நிர்வாக அமைப்பில் நேற்று முன்தினம் மிகப்பெரிய மாற்றங்களை சோனியா காந்தி செய்தார். செயற்குழுவுக்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர், பொதுச்செயலாளர்கள் பலர் நீக்கப்பட்டனர், மாநிலங்களுக்கு புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

மேலும், புதிய கட்சித் தலைவரைத் தேர்வு செய்யவும் தேர்வுக்குழுவையும் சோனியா காந்தி நியமித்தார்.இந்த மாற்றங்களைச் செய்தபின், அவர் அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.

கரோனா வைரஸ் பரவல் காரணமாக சோனியா காந்தி அமெரிக்காவுக்கு சிகிச்சைக்காகச் செல்வது தாமதமாகி வந்தநிலையில், நேற்று புறப்பட்டுள்ளார். டெல்லியிலிருந்து நேற்று அதிகாலை புறப்பட்டுச் சென்ற சோனியா காந்தி இம்மாத இறுதி வாரத்தில்தான் தாயகம் திரும்புவார்.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் தலைமைச் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “ காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தனது வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக பயணம் மேற்கொண்டுள்ளார். கரோனா வைரஸ் பரவல் காரணமாக அவரின் மருத்துவப் பரிசோதனை தாமதமாகி வந்தது. சோனியா காந்தியுடன் அவரின் மகன் ராகுல் காந்தியும் உடன் சென்றுள்ளார். இந்த வாய்ப்பை அனைவரும் பயன்படுத்தி அவரின் உடல்நலம் சிறப்படைய வாழ்த்துக்களையும், நன்றியும் தெரிவிக்கிறோம்” எனத் தெரிவித்தார்

SCROLL FOR NEXT