கேரளத்தில் அரசியல் மாற்றத்தை உருவாக்கும் முனைப்போடு 20 சட்டப்பேரவை தொகுதிகளை மட்டும் தேர்ந்தெடுத்து களப்பணி செய்துவருகிறது பாஜக. இதன் பின்னணியில் பாஜகவினர் மிகப்பெரிய அரசியல் காய்நகர்த்தலுக்கும் காத்திருக்கின்றனர்.
கேரளத்தில் எப்படியாவது காலூன்ற வேண்டும் என்ற முனைப்புடன் பாஜக வெகுகாலமாகப் போராடி வருகிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கணிசமான வாக்குகளைப் பெற்றாலும் இங்கு ஒரு தொகுதியில் கூட வெற்றிபெற முடியவில்லை. இத்தனைக்கும் சபரிமலைக்கு அனைத்து வயதுடைய பெண்களையும் அனுமதித்த விவகாரத்தில் ஆளும் மார்க்சிஸ்ட் கட்சிக்கு எதிராகப் பாஜக, கடுமையான போராட்டங்களை முன்னெடுத்தது.
அதன் விளைவாக, ஆளும் மார்க்சிஸ்ட் கட்சியைப் பலவீனப்படுத்தினாலும், வாக்கு அரசியலில் காங்கிரஸுக்கே அது கைகொடுத்தது. மார்க்சிஸ்டுக்கு எதிரான மனநிலையில் காங்கிரஸுக்கு வாக்களிக்கும் போக்கை உன்னிப்பாக கவனித்திருக்கும் பாஜக, வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்குக் கொஞ்சம் மாற்றி யோசித்து வியூகம் வகுத்துள்ளது.
கேரளத்தில் மொத்தம் 140 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இதில் நேமம் தொகுதியில் போட்டியிட்டு வென்ற ஓ.ராஜகோபால் மட்டுமே இப்போது பாஜகவின் ஒரே எம்எல்ஏ. இப்போது 91 வயதாகும் ராஜகோபால் கேரளத்தில் பாஜகவை வளர்த்ததில் பெரும்பங்கு வகித்தவர். கேரள சட்டப்பேரவையின் முதல் பாஜக எம்எல்ஏவும் இவர்தான். இப்போது பாஜகவின் வசம் இருக்கும் நேமம் தொகுதியுடன் திருவனந்தபுரம், திருச்சூர், பாலக்காடு, காசர்கோடு உள்பட 20 தொகுதிகளை மட்டும் தேர்ந்தெடுத்துத் தீவிரமாகத் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர் பாஜகவினர். மொத்தம் 140 தொகுதிகளைக் கொண்ட கேரளத்தில் 20 தொகுதிகளை மட்டும் பாஜக குறிவைப்பதன் பின்னணி கவனிக்கத்தக்கது.
இது குறித்துக் கேரள மாநில பாஜக நிர்வாகிகள் சிலரிடம் கேட்டபோது, “கேரளத்தில் மொத்தமுள்ள 140 தொகுதிகளிலும் பாஜக கூட்டணிக் கட்சிகளோடு சேர்ந்து போட்டியிட்டாலும் கேரளத்தில் உடனே ஆட்சிக்கு வந்துவிடும் இடத்தில் இல்லை என்பதே உண்மை. அதேநேரம் கேரளத்தில் வலுவாக வேரூன்றி இருக்கும் காங்கிரஸ், கம்யூனிஸ்டுகளையும் மீண்டும் அதிகாரத்துக்கு வராமல் தடுக்க வேண்டும். அதற்கான வியூகம்தான் இந்த 20 தொகுதி அஸ்திரம். கேரளத்தில் பெரும்பான்மையோடு ஆட்சி அமைக்க 71 சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவு தேவை. பாஜக 20 இடங்களைக் கைப்பற்றிவிட்டால் இந்தப் பெரும்பான்மை எண்ணிக்கையில் சிக்கலை ஏற்படுத்தலாம்.
ஒருவேளை, பெரும்பான்மைக்காகக் காங்கிரஸ் கட்சியும், மார்க்சிஸ்ட் கட்சியும் கைகோத்துவிட்டால் இருவருமே ஒரு நாணயத்தின் இருபக்கங்கள் எனப் பிரச்சாரம் செய்து, அடுத்த 5 ஆண்டுகளில் பிரதான எதிர்கட்சியாக மக்களின் மனதில் பாஜக நிற்கும். 2026-ல் ஆட்சியமைப்பதற்கான அடித்தளமாக அதை பயன்படுத்திக்கொள்ள முடியும். ஒருவேளை, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சி இரண்டும் இணையாமல் விட்டால் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் ஆளுநர் ஆட்சி அமைந்துவிடும். காங்கிரஸும் கம்யூனிஸ்ட்டுகளும் அதிகாரத்தைக் கைப்பற்றாமல் தடுக்கவே இந்த முயற்சி” என்கின்றனர்.
பாஜகவின் இந்த அரசியல் கணக்கு கேரள அரசியலில் எடுபடுமா என்பதற்குக் காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.