உத்திரப்பிரதேசம் அலிகரில் நேற்று துப்பாக்கி முனையில் ரூ.40 லட்சம் மதிப்புள்ள நகைகள் திருடப்பட்டன. துப்பாக்கி முனையில் நடந்த திருட்டில் கரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளை திருடர்கள் கடைப்பிடித்துள்ளனர்.
டெல்லிக்கு அருகில் 130 கி.மீ தொலைவில் உள்ள நகரம் அலிகர். கிரிமினல் குற்றங்களுக்கு பெயர் போன நகரின் பன்னா தேவி பகுதியின் நகைக்கடையில் நேற்று மதியம் விற்பனை நடைபெற்றுக் கொண்டிருந்தது.
அப்போது, வாட்ட,சாட்டமான மூன்று இளைஞர்கள் கரோனா பாதுகாப்பு முகக்கவசம் அணிந்தபடி உள்ளே வந்தனர். வாசலில் அளிக்கப்பட்ட பூச்சி மருந்தால் பொறுமையுடன் தங்கள் கைகளையும் கழுவிக் கொண்டனர்.
இவ்வாறு கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரமாக கடைப்பிடித்தவர்களது உண்மை முகம், உள்ளே நுழைந்த பின் வெளியானது. இதில் இருவர் தம் இடுப்பில் மறைத்து வைத்திருந்த கள்ளத்துப்பாக்கிகளை திடீர் என எடுத்தனர்.
அடுத்து அதில் நகைக்கடை உரிமையாளர் மற்றும் பணியளர்களை குறி வைத்து மிரட்டினர். அதேசமயம் உடன் வந்த மற்றொரு திருடன் கொண்டுவந்த பையில் நகைகளையும், பணத்தையும் அள்ளத் துவங்கினான்.
ஒரிரு நிமிடங்களில் தம் திருட்டுப்பணியை முடித்தவர்கள் வெளியில் நிறுத்தி வைத்த தம் இருசக்கர வாகனங்களில் தப்பினர். இந்த முழு நிகழ்வும் நகைக்கடையின் சிசிடிவி கேமிராவில் பதிவாகின.
இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் அலிகர் எஸ்எஸ்பியான தமிழர் ஜி.முனிராஜ் கூறும்போது, ‘திருடப்பட்டது மொத்தம் ரூ.40 லட்சம் மதிப்பிலானது எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
சிசிடிவி பதிவுகளை சமூகவலைதளங்களில் வைரலாக்கி இருந்தோம். இதன் பலனாக அவர்களை நெருங்கி விட்டோம். விரைவில் கைது செய்வோம்.’ எனத் தெரிவித்தார்.
இதுபோன்ற கொள்ளை, அதே நகைக்கடையில் சுமார் நான்கு வருடங்களுக்கு முன்பும் நடைபெற்று உள்ளது. எனவே, கிரிமினல் குற்றவாளிகளை என்கவுண்டர் செய்வதில் உபியில் பெயர்பெற்ற அதிகாரி முனிராஜிடம் அலிகர்வாசிகள் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது