கரோனா வைரஸ் அச்சுறுத்தல் உள்ள நிலையில், நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் வயதான எம்.பி.க்கள் பங்கேற்பார் களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
கரோனா வைரஸ் பரவலுக்குப் பிறகு முதன்முறையாக நாடாளு மன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் வரும் திங்கட்கிழமை தொடங்கு கிறது. அக்டோபர் 1-ம் தேதி வரையில் விடுமுறையின்றி நடை பெறவுள்ள இத்தொடரில் கரோனா பரவலை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள் ளன. ஒவ் வொரு எம்.பி. அமரும் இடத்தைச் சுற்றியும் சுமார் 6 அடி சமூக இடைவெளி விடப்படுகிறது.
இதனால் எழும் இடப்பற்றாக் குறையை சமாளிக்கும் விதமாகநாடாளுமன்ற வரலாற்றில் முதலாவதாக மக்களவை எம்.பி.க்களில் பலர் மாநிலங்களவையில் அமரவைக்கப்பட உள்ளனர். அதேபோல், மாநிலங்களவை எம்.பி.க்களும் மக்களவையில் மாறி அமர்த்தப்படும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதுமட்டுன்றி பார்வையாளர்கள், அதிகாரிகள் மற்றும் முன்னாள் எம்.பிக்கள் மாடங்களிலும் எம்.பி.க்கள் அமர உள்ளனர்.
செய்தியாளர் மாடங்களில் வழக்கம்போல் அன்றி ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே பத்திரிகையாளர்கள் அமர வைக்கப்படுவார்கள். இதிலும், நிரந்தர அனுமதி அட்டை உள்ள பத்திரிகையாளர்கள் தலா ஒரு நிறுவனத்திற்கு ஒருவர் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளனர்.
இதற்கிடையே திரிணமூல் காங்கிரஸின் வயதான எம்.பி.க்கள் இக்கூட்டத்திற்கு செல்ல வேண்டாம் என அக்கட்சித் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி அறிவுறுத்தி உள்ளார். இதுபற்றிய மற்ற கட்சிகளின் முடிவுகள் வெளியாகவில்லை.
இந்நிலையில், வயதான எம்.பி.க்கள் கூட்டத்தொடருக்கு வருவார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. நாடாளுமன்ற இணையதளத்தில் உள்ள தகவலின்படி இரு அவைகளிலும் சேர்த்துமொத்தம் 785 எம்.பி.க்கள் உள்ளனர். இவர்களில் 65 வயதுக்கும் அதிகமானவர்கள் எண்ணிக்கை மாநிலங்களவையில் 97, மக்களவையில் 130 ஆகும்.
இதில் 80-க்கும் அதிக வயதுள்ளவர்கள் மாநிலங்களவையில் 20 பேரும், 75 வயதை கடந்தவர்கள் மக்களவையில் 30 பேரும் உள்ளனர். கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற எம்.பி.க்கள் பலரும் உள்ளனர். இவர்களது குடும்பத்தாருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டு தனிமைக்குள்ளானவர்களும் உண்டு. 15 மத்திய அமைச்சர்களும் கரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றவர்கள்.
தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுஇறந்தார். இதே கட்சியின் கார்த்தி சிதம்பரம், திமுகவின் ஜெகத்ரட்சகன், இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் செல்வராஜ்ஆகியோர் சிகிச்சைக்கு பின் குணமாகியுள்ளனர்.
இவர்களன்றி மேலும்2 எம்.பி.க்களும் கரோனா சிகிச்சையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் ஓரிரு எம்.பி.க்கள் தங்கள் உடலில் எதிர்ப்பு சக்தி குறைவு என்பதால் நாடாளுமன்றம் வருவது குறித்து இன்னும் முடிவு செய்யாமல் உள்ளனர்.
இதுகுறித்து மருத்துவரான திமுக எம்.பி. செந்தில்குமார் ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் கூறும்போது, ‘‘ஒவ்வொரு எம்.பி.யும் கூட்டத்தொடருக்காக கிளம்பிச் சென்று தங்கள் வீடு திரும்பும் வரை கரோனா ஆபத்தை தவிர்க்க முடியாது. கூட்டத்தொடரினால் எம்.பி.க்கள் இடையே கரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
நாடாளுமன்றத்தில் முறை யான பாதுகாப்பு செய்யப் பட்டிருந்தாலும் கூட்டத்தை முடித்து எம்.பி.க்கள் டெல்லியில் வேறு பல இடங்களுக்கும் செல்லவேண்டியக் கட்டாயம் உள்ளது. இதனால், எம்.பி.க்களில் தொற்று எண்ணிக்கை கூடிவிடும் ஆபத்து உள்ளன. இந்த ஆபத்தை நன்கு உணர்ந்தே அனைத்து எம்.பி.க்களும் தங்கள் கடமையை நிறைவேற்ற வேண்டி துணிச்சலை காட்ட வேண்டி உள்ளது" என்றார்.