காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டியில் பல்வேறு மாற்றங்களை செய்து கட்சித் தலைவர் சோனியா காந்தி நேற்று உத்தரவிட்டுள்ளார். அதன்படி, பல மூத்த தலைவர்கள் நீக்கம் செய்யப்பட்டு, பல புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக்கு புதிய பொதுச் செயலாளர்கள், மாநில பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மூத்த தலைவர்களான குலாம்நபி ஆசாத்,மோதிலால் வோரா, அம்பிகா சோனி, மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளராக இருந்த முகுல் வாஸ்னிக், மத்திய பிரதேச மாநில பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகம், புதுச்சேரி, கோவா மாநிலப் பொறுப்பாளராக தினேஷ் குண்டுராவ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கர்நாடக முன்னாள் முதல்வர் குண்டுராவின் மகன்.
முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் மீண்டும் காரிய கமிட்டி உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கட்சியின் தேர்தல் பணிக்குழு தலைவராக மதுசூதன் மிஸ்திரி, உறுப்பினர்களாக ராஜேஷ் மிஸ்ரா,கிருஷ்ண பைரே கவுடா, கரூர் எம்.பி. ஜோதிமணி, அரவிந்தர் சிங்லவ்வி நியமிக்கப்பட்டுள்ளனர்.