இந்தியா

வறட்சியை விட அதிக மழைதான் விவசாயிகளின் தற்கொலைக்கு காரணம்: இந்திய - வெளிநாட்டு பல்கலை. ஆய்வில் தகவல்

செய்திப்பிரிவு

கொலம்பியா பல்கலைக் கழகத்தின் மெயில்மேன் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் தொற்று நோய் துறையின் ஆராய்ச்சியாளர் ராபின் ஏ ரிச்சர்ட்சன் தலைமையில் கிராமங்களில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

கனடாவில் மெக்கில் பல்கலைக்கழகம் மற்றும் ஐஐடி காந்தி நகர் ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து எடுக்கப்பட்ட இந்த ஆய்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமப்புறங்களில் 2001 முதல் 2013 வரையிலான கால கட்டத்தில் இறப்புகளின் எண்ணிக்கையை ஆய்வு செய்திருக்கிறார்கள். இந்த கால கட்டத்தில் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட கிராமப்புறங்களில் 9,456 தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன.

பருவ காலங்கள் மற்றும் பயிர் விளைச்சல் ஆகியவற்றின் அடிப்படையில் தற்கொலைகளை ஆய்வு செய்ததில் வறட்சி காலங்களில் தற்கொலைகள் 3.6 சதவீதம் அதிகரித்துள்ளதும், மழைக் காலங்களில் 18.7 சதவீதம் அதிகரித்துள்ளதும் தெரிய வந்துள்ளது.

இந்த கிராமப்புறங்களில் தண்ணீர் கிடைக்கும் தன்மை அடிப்படையில் ஆய்வு செய்துள்ளனர். இதுவரை தற்கொலைகளை தண்ணீர் கிடைக்கும் தன்மை அடிப்படையில் யாரும் ஆய்வு செய்ததில்லை. மேலும் தண்ணீர் இல்லாத வறட்சியான காலங்களைவிட அதிக மழையும் வெள்ளமும் ஏற்பட்ட காலங்களில்தான் அதிகமான தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT