இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே மூன்று நாள் பயணமாக நேற்று மாலை டெல்லி வந்தார்.
இலங்கையில் கடந்த ஆகஸ்ட் 17-ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. இதில் ஐக்கிய தேசிய கட்சி அமோக வெற்றி பெற்று ரணில் விக்ரமசிங்கே மீண்டும் பிரதமராகப் பதவியேற்றார்.
அவர் பதவியேற்ற பிறகு முதல் வெளிநாட்டுப் பயணமாக நேற்று மாலை டெல்லி வந்தார். டெல்லி விமான நிலையத்தில் இறங்கிய ரணிலை மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வரவேற்றார்.
பிரதமர் நரேந்திர மோடியை இன்று அவர் சந்தித்துப் பேசுகிறார். அப்போது இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக மீனவர் பிரச்சினை உட்பட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்தும் இந்தச் சந்திப்பின்போது விவாதிக்கப்பட உள்ளன. மேலும் தலைமன்னார்- ராமேசுவரம் இடையில் தரைவழி இணைப்பு பாலம் அமைப்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்படும் என்று தெரிகிறது.
பிரதமர் ரணிலுடன் 16 பேர் அடங்கிய உயர்நிலைக் குழுவும் டெல்லி வந்துள்ளது. குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே நாளை சந்தித்துப் பேசுகிறார்.