வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறையின் ஸ்மார்ட் நகரங்கள் திட்டம் ஏற்பாடு செய்த காணொலி காட்சி நிகழ்ச்சியில், பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் ஸ்மார்ட் நகரங்களை உருவாக்குவதற்கான கட்டமைப்பை, மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை இணையமைச்சர் ஹர்தீப் சிங் பூரி இன்று தொடங்கி வைத்தார்.
திட்டமிடுதல், முதலீடு திட்டங்களை அமல்படுத்தும் போது, பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் வகையிலான தெளிவான கட்டமைப்பை வழங்குவதே CSCAF-ன் நோக்கம். கடந்த 10 ஆண்டுகளில், புயல், வெள்ளம், அனல் காற்று, தண்ணீர் பஞ்சம், வறட்சி போன்றவை நமது நகரங்களில் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தின. இது போன்ற நிகழ்வுகளால், உயிரிழப்பு ஏற்படுவதோடு, பொருளாதார பாதிப்பும் ஏற்படுகிறது.
அதனால் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் அணுகுமுறையுடன், இந்தியாவில் நகர்ப்புறங்களை மேம்படுத்த CSCAF முயற்சிகள் மேற்கொள்கிறது. இந்நிகழ்ச்சியில், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகத்தின் செயலாளர் துர்கா சங்கர் மிஸ்ரா, மூத்த அதிகாரிகள், சுற்றுச்சூழல் அமைச்சக அதிகாரிகள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மை செயலாளர்கள், ஸ்மார்ட் நகரங்கள் திட்ட இயக்குனர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தற்போதுள்ள கட்டமைப்பு, உலகளவில் பின்பற்றப்படும் மதிப்பீடு அணுகுமுறைகள், 26 நிறுவனங்கள், 60 நிபுணர்கள் ஆகியோருடன் பல அம்சங்கள் குறித்து ஆய்வு செய்த பின், பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் ஸ்மார்ட் நகரங்களின் கட்டமைப்பு உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.