மாநிலங்களுக்கிடையேயான மருத்துவ பிராணவாயு போக்குவரத்துக்கு எந்தவிதமான கட்டுப்பாடும் விதிக்க வேண்டாம் என்று மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
பல்வேறு சட்ட பிரிவுகளை பயன்படுத்தி மாநிலங்களுக்கிடையேயான மருத்துவ பிராணவாயு போக்குவரத்துக்கு சில மாநிலங்கள் கட்டுப்பாடுகள் விதிப்பதாகவும், உள்ளூர் உற்பத்தியாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் அம்மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு மட்டுமே பிராணவாயுவை விநியோகிக்க வேண்டும் என்று அறிவுறுத்துவதாகவும் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்துக்கு தகவல்கள் கிடைத்தன.
இதைத் தொடர்ந்து, மாநிலங்களுக்கிடையேயான மருத்துவ பிராணவாயு போக்குவரத்துக்கு எந்தவிதமான கட்டுப்பாடும் விதிக்க வேண்டாம் என்று மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுகாதார செயலாளர் எழுதியுள்ள கடிதத்தில், கோவிட்-19 பாதிப்பு கடுமையாக உள்ள நோயாளிகளுக்கு பிராணவாயு வழங்குவது மிகவும் அவசியம் என்றும், எனவே பிராணவாயுவின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு மாநிலங்களுக்கு இடையேயான அதன் போக்குவரத்துக்கு எந்தவித தடையும் விதிக்கக்கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கோவிட் நோயாளிகளுக்கு பிராணவாயு கிடைப்பதை உறுதி செய்வது ஒவ்வொரு மாநிலம்மற்றும் யூனியன் பிரதேசத்தின் கடமை என்றும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.