இந்தியா

அமெரிக்க அயல்நாட்டு ஏஜெண்ட்ஸ் பதிவுச் சட்டத்தின் கீழ் பாஜக கிளை அமைப்பு பதிவு

செய்திப்பிரிவு

அமெரிக்க நீதித்துறையின் கீழ் யுஎஸ் அயல்நாட்டு ஏஜெண்ட்ஸ் பதிவுச் சட்டம், 1938-ன் படி இந்தியாவின் முதல் கட்சியாக பாஜகவின் கிளை அமைப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாஜகவின் அயல்நாட்டு நட்புக் குழு (Overseas Friends of the BJP- OFBJP) பாஜக கிளையை பதிவு இந்தச் சட்டத்தின் கீழ் பதிவு செய்ததில் முக்கியப் பங்காற்றியுள்ளது. ஆகஸ்ட் 27, 2020-ல் பதிவு செய்யப்பட்டு விட்டது.

பாஜகவின் வெளியுறவு விவகாரப் பிரிவுத் தலைவர் விஜய் சவுதாவாலே இது பற்றி கூறும்போது, “ஓவர்சீஸ் ஃபிரெண்ட்ஸ் ஆஃப் பிஜேபி யுஎஸ் சட்டத்தின் கீழ் தாமாகவே முன் வந்து பதிவு செய்துள்ளது” என்றார். மேலும் பாஜகவுக்கும் பாஜக வெளிநாட்டு நண்பர்கள் அமைப்புக்கும் எந்தவிதமான நிதிப்பரிவர்த்தனையும் இல்லை என்று கூறிய விஜய் சவுதாவாலே இந்த அமைப்பு நடத்தும் கூட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் தன்னார்வல அடிப்படையில் மேற்கொள்ளப்படுவதே, அதனால் அமெரிக்க சட்டத்தின் கீழ் பதிவு செய்வது நல்லது என்று வழக்கறிஞர்களை கலந்தாலோசித்து முடிவெடுத்தோம், என்றார்.

இந்தச் சட்டத்தின் கீழ் பதிவு செய்ததையடுத்து பாஜக அயல்நாட்டு நண்பர்கள் அமைப்பு தங்கள், கூட்டங்கள் பற்றிய தகவல்களை அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களிடத்தில் தெரிவிக்க வேண்டும். நிகழ்ச்சி ஏற்பாடு மற்றும் அமெரிக்க குழுக்களுடனான நிதி பரிவர்த்தனைகளும் முறையாகத் தெரிவிக்கப்பட வேண்டும்.

அதே போல் அமெரிக்கத் தேர்தலில் அமைப்பு ரீதியான உதவியை பாஜக அயல்நாட்டு நண்பர்கள் அமைப்பு பயன்படுத்த முடியாது, ஏனெனில் அது ‘அன்னியத் தலையீடு’ ஆகி விடும்.

இந்தச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட மற்ற இந்திய அமைப்புகள் பெரும்பாலும் இந்தியத் தூதரகத்தால் ஈடுபடுத்தப்பட்ட பொது உறவுகள் நிறுவனங்கள் அல்லது சுற்றுலாத்துறையின் கீழ் பதிவு செய்யப்பட்டதாகும்.

இந்தியாவிலிருந்து அறிமுகம் இல்லாத இந்திய ஜனநாயகக் கட்சி என்ற ஒன்றும் டிவி சேனல் ஒன்றும் இந்த அமெரிக்கச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரானின் கட்சி, பாக். முஸ்லிம் லீக் (என்), வங்கதேச எதிர்க்கட்சியான வங்கதேச தேசியவாதக் கட்சி ஆகியவை அமெரிக்க ஃபரா சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்க நீதித்துறை ஃபராச் சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த முடிவு செய்து அனைத்து அயல்நாட்டு அமைப்புகள் பற்றிய விசாரணையை மேற்கொண்டது என்றும், இந்தச் சட்டத்தின் கீழ் பதிவு செய்ய வேண்டும் இல்லையேல் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதனையடுத்தே பாஜக கிளையான அயல்நாட்டு பாஜக நண்பர்கள் அமைப்பு இந்தச் சட்டத்தின் கீழ் பதிவு செய்திருப்பதாகவும் தெரிகிறது.

-தி இந்து (ஆங்கிலம்)

SCROLL FOR NEXT