இந்தியா-சீனா இடையே எல்லைப் பதற்ற விவகாரத்தில் ராணுவம் சிறப்பாகச் செயல்பட்டு சீன ராணுவத்துக்கு பதிலடி கொடுத்து வருகிறது, ஆனால் தலைமை என்ன செய்து கொண்டிருக்கிறது, அரசியல் தலைமையல்லவா முழுவீச்சில் இதில் செயல்பட வேண்டும் என்று ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் ஓவைஸி பிரதமர் மோடி குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:
எல்லையில் நம் படை வீரர்கள் சீனப் படைகளுக்கு எதிராக சிறப்பாகச் செயல்படுகின்றனர். ஆனால் இந்த நெருக்கடி ராணுவம் தொடர்பானது அல்ல. இது அரசியல் சார்ந்தது, எனவே அரசியல் தலைமைதான் தீர்வு காண வேண்டும், ஆனால் அவர் காணாமல் போய்விட்டார். ஏன் பிரதமர் அலுவலகம் வாரக்கணக்கில் இது தொடர்பாக ஒன்றும் பேசாமல் இருந்தது?
ஒருவேளை மயில்களுக்கு உணவளிக்கும் நேரம் போக மீதி நேரமிருந்தால் பிரதமர் நாட்டு மக்களுக்கு இது பற்றி கூறியிருப்பார், மேலும் சீனாவின் பெயரை உச்சரிக்க அவருக்கு தைரியம் வந்திருக்கும்,
இவ்வாறு ஓவைஸி பேசியுள்ளார்.
இந்தியா-சீனா இடையே 5 அம்ச அமைதித் திட்டத்துக்கு ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீயும் மாஸ்கோவில் சந்தித்து எல்லை விவகாரத்தை விவாதித்து கூட்டறிக்கை வெளியிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.