வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெற பொற்கோயில் நிர்வாகத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் உள்ள பொற்கோயில் சீக்கியர்களின் புனிதத் தலமாக விளங்குகிறது. 1984-ல் பொற்கோயிலில் தீவிரவாதி கள் ஆயுதங்களை குவித்து வைத்து தனிநாடு கோரிக்கை எழுப்பினர்.
அப்போது, நீல நட்சத்திர நடவடிக்கை எடுக்கப்பட்டு தீவிரவாதிகளின் சதி முறியடிக்கப் பட்டது. அப்போது முதல் பொற்கோயில் நிர்வாகம் வெளிநாடு களில் இருந்து நிதி பெறுவதற்கு தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், சிரோமணி குருத்வாரா பிரபந்தக் கமிட்டி தடையை நீக்குமாறு மத்திய அரசைக் கேட்டுக் கொண்டது. சிரோமணி அகாலிதளம் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதலும் இதற்காக முயற்சி மேற்கொண்டார்.
இதைத் தொடர்ந்து தடையை நீக்கி, வெளிநாடுகளில் இருந்து பொற்கோயில் நிர்வாகம் நன்கொடை பெறுவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இத்தகவலை சிரோ மணி குருத்வாரா பிரபந்தக் கமிட்டியின் மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.