இந்தியா

உத்தரபிரதேசத்தில் 24 மணி நேரத்தில் தமிழக பிரிவைச் சேர்ந்தவர் உட்பட 2 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடைநீக்கம்

ஆர்.ஷபிமுன்னா

உத்தரபிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் ஒருவரான தமிழகப் பிரிவைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி அபிஷேக் தீட்சித் 2-வது முறையாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

உ.பி.யைச் சேர்ந்த அபிஷேக்தீட்சித் கடந்த 2006-ம் ஆண்டு ஐபிஎஸ் தேர்ச்சி பெற்று தமிழகப் பிரிவில் பணியமர்த்தப்பட்டார். இவர் கிருஷ்ணகிரி மாவட்டகாவல் கண்காணிப்பாளராக இருந்தபோது அபிஷேக் மீது ஊழல் புகார் எழுந்தது. இதனால், அவரது வீட்டில் தமிழக ஊழல் மற்றும் கண்காணிப்புத் துறை போலீஸார் சோதனை நடத்தினர். இதைத் தொடர்ந்து தமிழக அரசால் அபிஷேக் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டார்.

இந்நிலையில், மீண்டும் பணியமர்த்தப்பட்ட அபிஷேக்கின் கடும் உழைப்பின் அடிப்படையில் அவருக்கு மாநிலங்களுக்கு இடையிலான 3 வருட அயல்பணி உ.பி.யில் மார்ச் 2019-ல் கிடைத்தது.இதனால், உ.பி.யில் பிலிபித்மாவட்ட எஸ்.பி.யாக நியமிக் கப்பட்டார். இந்நிலையில் கரோனாகாலத்தில் சங்கு ஊதியபடி அப்பகுதியில் பொதுமக்கள் ஊர்வலம் நடத்தியது சர்ச்சைக்குள்ளானது. பிறகு அங்கிருந்து கடந்த ஜூன் 16-ல் பிரயாக்ராஜ் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார்.

பிரயாக்ராஜில் மூன்று மாத பணியின்போது சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்தவில்லை என அபிஷேக் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதன் காரணமாக, அபிஷேக்கை உ.பி. அரசு, பணியிடைநீக்கம் செய்து நேற்று முன்தினம் விசாரணைக்கு உத்தரவிட் டுள்ளது. அபிஷேக்குக்கு முன்பாகஅப்பதவியில் இருந்த ஐபிஎஸ் அதிகாரி சத்யார்த் அனிருதா பங்கஜும் பணியிடை நீக்கம் செய்யப் பட்டிருந்தார். இதற்கு பங்கஜ் தனது அலகாபாத் அரசு வீட்டில் கரோனா தொற்றுள்ள நண்பரை தங்க வைத்ததாகவும், அதுவே பரவலுக்கு காரணமானதாகவும் குற்றம் சுமத்தப்பட்டது.

இதன் பின்னணியில் சத்யார்த் உயர் நீதிமன்ற உத்தரவின்படி உ.பி. அரசின் ஆசிரியர் தேர்வில்69,000 பேரை பணி அமர்த்தலில் நடைபெற்ற ஊழலை கண்டுபிடித்தது காரணம் எனவும் கூறப்பட்டது.

இதனிடையே, நேற்று உ.பி.யின் மஹோபா மாவட்ட எஸ்பியான மணிலால் பட்டிதார் என்ற ஐபிஎஸ்அதிகாரியும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 2014-ம்ஆண்டு உ.பி. பிரிவின் அதிகாரியான இவர் மீது மஹோபாவின் தொழில் அதிபர்களிடம் மாதம் ரூ.7 லட்சம் பெற்றதாகவும் கூறப்பட்ட புகார் மீது விசாரணை நடத்தப்படுகிறது. இத்துடன் அபிஷேக்,மணிலால் ஆகிய இரு அதிகாரிகளின் சொத்துகளை கணக்கெடுக்கவும் முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். இவர் முதல்வராக பொறுப்பேற்றது முதல் இதுவரை 7 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய் யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT