இந்திய - பசிபிக் பிராந்தியத்தில் சீனா ஆதிக்கம் செலுத்த தொடர்ந்து முயற்சிக்கிறது. அத்துடன், இந்தியா, நேபாளம் போன்ற அண்டை நாடுகளை ஆக்கிரமிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், இந்தியாவும் ஜப்பானும் நேற்று ராணுவ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இதன்மூலம் இரு நாடுகளும் பரஸ்பர ராணுவ ஒத்துழைப்பை பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தில் இந்திய பாதுகாப்புத் துறை செயலர் அஜய் குமார் மற்றும் ஜப்பான் தூதர் சுசுகி சடோஷி ஆகியோர் கையெழுத்திட்டனர் என்று பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
இரு நாடுகளுக்கு இடையில் நெருங்கிய ராணுவ ஒத்துழைப்பு, இரு நாட்டு ராணுவ தளவாடங்கள் மற்றும் தளங்களைப் பயன்படுத்திக் கொள்ளுதல், கூட்டு ராணுவ பயிற்சி மேற்கொள்ளுதல், ரகசிய தகவல்களைப் பரிமாறிக் கொள்ளுதல் உட்பட அனைத்து அம்சங்களிலும் இரு நாடுகளும் இணைந்து செயல்பட இந்த ஒப்பந்தம் வழி ஏற்படுத்தி உள்ளது.
இதுபோன்ற ராணுவ ஒப்பந்தத்தை அமெரிக்கா, பிரான்ஸ், தென் கொரியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியாவுடன் இந்தியா ஏற்கெனவே மேற்கொண்டுள்ளது. இதன்மூலம் இந்த நாடுகளில் உள்ள ராணுவ வசதிகளை இந்தியா இணைந்து பயன்படுத்திக் கொள்ள முடியும். அங்குள்ள விமான தளங்கள், துறைமுகங்களை இந்தியா தேவைக்கேற்ப பயன்படுத்த முடியும். அதேபோல் அந்த நாடுகளும் இந்தியாவில் உள்ள வசதிகளை பெற்றுக் கொள்ள முடியும்.
சீனாவும் பாகிஸ்தானின் கராச்சி மற்றும் குவாதார் துறைமுகங்களில் தனது நிலையை பலப்படுத்தி இருக்கிறது. அங்கு தனது போர்க் கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்களை நிறுத்தி உள்ளது. மேலும், கம்போடியா போன்ற சிறிய நாடுகளிலும் தனது ராணுவ நிலைகளை ஏற்படுத்த சீனா தொடர்ந்து முயற்சித்து வருகிறது. குறிப்பாக இந்தியாவுக்கு அருகில் மட்டும் 6 முதல் 8 போர்க் கப்பல்களை சீனா நிறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.