மாநிலங்களவைத் துணைத் தலைவர் தேர்தல் குறித்து மாநிலங்களவையும், மத்திய அரசும் உரிய முடிவு எடுக்கும் என்று மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா இன்று தெரிவி்த்தார்.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் வரும் 14-ம் தேதி தொடங்க உள்ளது. கரோனா வைரஸ் பரவலுக்கு இடையே கூட்டத் தொடர் தொடங்குவதில் பல்வேறு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை நாடாளுமன்றம் செய்து வருகிறது. சமூக விலகலைக் கடைப்பிடிக்கும் வகையில் இருக்கைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா இன்று மக்களவையில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை பார்வையிட்டபின் ஊடகங்களுக்குப் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
''நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இந்த ஆண்டு கரோனா வைரஸ் எனும் பெரும் சவால்களுக்கு இடையே நடக்க உள்ளது. இது மிகவும் வரலாற்றுச் சிறப்புமிக்க தொடராக இருக்கும்.
கரோனா வைரஸ் பரவல்களுக்கு மத்தியிலும் நம்முடைய அரசியலமைப்புக் கடமைகளை நிறைவேற்ற இருக்கிறோம். நாடாளுமன்றம் நம்பகத்தன்மையுடனும், மக்களுக்குப் பதில் அளிக்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும் என்பதை நாம் விரும்புகிறோம்.
கரோனா வைரஸ் தடுப்பு விதிகளைப் பின்பற்றி இந்தக் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் கேள்வி நேரத்துக்குப் பிந்தைய நேரம் அரை மணி நேரமாகக் குறைக்கப்பட்டுள்ளது. கேள்வி நேரம் ரத்து செய்யப்பட்டு, கேள்விகளை எழுத்து மூலம் எழுதிக் கொடுத்தால், எழுத்தில் பதில் தரப்படும். உறுப்பினர்கள் நேரடியாகப் பதில் அளிக்கமாட்டார்கள்.
மாநிலங்களவைத் துணைத் தலைவர் தேர்தல் குறித்து மாநிலங்களவையும், மத்திய அரசும் உரிய முடிவுகளை எடுக்கும்.
சமூக விலகலைப் பின்பற்றி மக்களவையில் இருக்கைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. மக்களவையில் 257 உறுப்பினர்களில் 172 பேர் மக்களவை பார்வையாளர்கள் மாடத்திலும், 60 பேர் மாநிலங்களவையிலும், 51 பேர் மாநிலங்களவை பார்வையாளர்கள் மாடத்திலும் அமர்வார்கள்
காகிதத்தின் பயன்பாட்டைக் குறைக்கும் வகையில் டிஜிட்டல் முறையில் எம்.பி.க்கள் வருகைப் பதிவேடு எடுக்கப்படும். எல்இடி திரைகள் மூலம் அவை சுமுகமாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து சேம்பர்களும் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தப்பட்டுள்ளது. அவை தொடங்கும் முன் எம்.பி.க்கள் அனைவரும் பிசிஆர் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்''.
இவ்வாறு ஓம் பிர்லா தெரிவித்தார்.