ஜிஎஸ்டி இழப்பீடு கேட்கும் மாநிலங்களிடம் ஆறுதலாகக் கடிதத்தை அளித்துவிட்டு, வெளியே கடன் பெற்றுக்கொள்ளுங்கள் என்று மத்திய அரசு ஆறுதல் வார்த்தைகள் கூறுகிறது. அப்படி ஆறுதல் அளிக்கும் கடிதத்துக்கு எந்த மதிப்பும் இல்லை என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கருத்துத் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் 41-வது ஜிஎஸ்டி கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடந்தது. அப்போது, அவர் பேசுகையில், “நாட்டின் பொருளாதாரம் கடவுளின் செயலால் உருவான கரோனா வைரஸால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஏறக்குறைய ரூ.3 லட்சம் கோடி ஜிஎஸ்டி வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இதில் ரூ.65 ஆயிரம் கோடியை செஸ் மூலம் ஈட்டினாலும், ரூ.2.35 லட்சம் கோடி பற்றாக்குறை ஏற்படும். மாநில அரசுகள் முன் இரு வாய்ப்புகளை வைக்கிறோம்.
மாநிலங்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறையைப் போக்க ரூ.97 ஆயிரம் கோடி வரை ரிசர்வ் வங்கியிடம் குறைந்த வட்டியில் கடன் பெற்றுக்கொள்ளலாம். 5 ஆண்டுகளுக்குப் பின் இதை மாநில அரசுகள் திருப்பிச் செலுத்த முடியும். ரூ.2.35 லட்சம் கோடி வேறுபாட்டை ரிசர்வ் வங்கியிடம் கலந்தாய்வு செய்து பெற்றுக் கொள்ளலாம்” எனத் தெரிவித்தார்.
ஆனால், 2017-ம் ஆண்டு ஜிஎஸ்டி வரி விதிப்பு அமல்படுத்தப்பட்டபோது, 5 ஆண்டுகளுக்கு மாநில அரசுகளுக்கு ஏற்படும் வரிவருவாய் இழப்பை மத்திய அரசு வழங்கும் என உறுதியளிக்கப்பட்ட நிலையில் தற்போது வெளியே கடன் பெற்றுக்கொள்ள மத்திய அரசு கூறிவிட்டது.
இருப்பினும் தங்களுக்கு உரிய ஜிஎஸ்டி இழப்பீட்டைத் தரக் கோரி, 8 மாநிலங்களின் நிதியமைச்சர்கள் பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளனர். ஆனால், இதுவரை மத்திய அரசுத் தரப்பில் பதில் இல்லை.
இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் ஜிஎஸ்டி இழப்பீடு குறித்து ட்விட்டரில் கருத்துப் பதிவிட்டுள்ளார்.
அவர் கூறுகையில், “ஜிஎஸ்டி வரி வருவாய் இழப்பீட்டு இடைவெளியை ஈடுகட்ட வெளிச்சந்தையில் கடன் பெற்றுக்கொள்ளும்படி மாநிலங்களுக்கு மத்திய அரசு ஆறுதல் கடிதம் அளிக்கலாம். ஆறுதல் வார்த்தைகளை அளித்து எழுதும் கடிதத்தால் எந்த மதிப்பும் இல்லை.
மாநிலங்களுக்கு தற்போது ரொக்கப் பணம் அவசியம். மத்திய அரசிடம்தான் பல்வேறு விதமான வாய்ப்புகள் உள்ளன. மத்திய அரசிடம் இருக்கும் வளங்களைப் பயன்படுத்தி நிதி திரட்டி, ஜிஎஸ்டி இழப்பீட்டை மாநிலங்களுக்கு வழங்கலாம்.
ஏற்கெனவே நிதிப் பற்றாக்குறையால் மாநிலங்கள் தவித்துவரும்போது, மாநில அரசுகளைக் கட்டாயப்படுத்தி கடன் வாங்கச் செய்தால், அவர்கள் தவிர்க்க முடியாமல் மக்களுக்குச் செலவழிக்க வேண்டிய முதலீட்டுச் செலவுகளிலும், உள்கட்டமைப்புகளிலும் குறைத்துக்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.
பொருளதாரத்தை மீண்டும் மறுமலர்ச்சி அடையச் செய்ய உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஜிஎஸ்டி வரி அமல்படுத்தியபோது மாநிலங்களுக்கு அளித்த வாக்குறுதியின்படி, அவர்களுக்கு உரிய இழப்பீட்டை வழங்கிட வேண்டும்” என சிதம்பரம் தெரிவித்துள்ளார்.