பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா: கோப்புப் படம். 
இந்தியா

பிரதமர் மோடி தலைமையில் கரோனா வைரஸுக்கு எதிராக இந்தியா நன்கு திட்டமிட்டுப் போரிட்டு வருகிறது: மத்திய அமைச்சர் அமித் ஷா பெருமிதம்

பிடிஐ

கரோனா வைரஸ் என்பது இதுவரை யாரும் பார்க்காத மிகப்பெரிய சவாலாகும். அதற்கு எதிராக இந்தியா பிரதமர் மோடியின் தலைமையில் நன்கு திட்டமிட்டுப் போரிட்டு வருகிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பெருமிதத்தோடு தெரிவித்தார்.

குஜராத்தின் காந்தி நகர் தொகுதியில் ரூ.134 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களைக் காணொலி மூலம் தொகுதியின் எம்.பி. அமித் ஷா இன்று தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

''கரோனா வைரஸ் என்பது எப்போதுமில்லாதவகையில் நமக்கும், ஒட்டுமொத்த மனிதகுலத்துக்கும் சவாலாக இருக்கிறது. ஆனால், கரோனா வைரஸுக்கு எதிராக இந்தியா, பிரதமர் மோடியின் தலைமையில் திட்டமிட்டுப் போரிட்டு வருகிறது. ஒட்டுமொத்த உலகமும், இந்தியாவின் செயல்பாடுகளை அங்கீகரித்து வருகிறது.

கரோனா வைரஸ் தாக்கத்தால், காந்தி நகர் தொகுதியில் நடந்த வந்த வளர்ச்சிப் பணிகள் மந்தமாகிவிட்டன. இந்தப் பெருந்தொற்று நோய் நீண்டநாட்கள் காந்தி நகரிலோ, குஜராத்திலோ, இந்தியாவிலோ இருக்க இயலாது. பிரதமர் மோடியின் தலைமையில் நிச்சயம் மீண்டும் பொருளாதாரத்தில் வளர்ச்சி வேகத்தை எட்டுவோம்.

நான் உள்துறை அமைச்சராகப் பதவி ஏற்றபின் முதல் முறையாக காந்தி நகர் வந்தபோது, என் தொகுதி மக்களிடம், மற்ற தொகுதிகளைவிட எப்போதும் வளர்ச்சியில் முதலிடத்தில் இருக்கும் வகையில் முன்னுரிமை கொடுத்து காந்தி நகரை உருவாக்குவேன் எனத் தெரிவித்தேன்.

குஜராத் மாநிலத்தில் கரோனா வைரஸ் பரவலைச் சிறப்பாகக் கட்டுப்படுத்தி, நடவடிக்கைகள் எடுத்துவரும் முதல்வர் விஜய் ரூபானிக்கு வாழ்த்துகள். தொடக்கத்தில் கரோனா வைரஸ் பரவல் அதிகமாக இருந்தது. அப்போது இருந்ததைவிட, இப்போது குஜராத்தில் கரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டு, நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

கரோனா வைரஸால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் குறைந்துவிட்டது. ஏராளமானோர் கரோனாவிலிருந்து நாள்தோறும் குணமடைந்து வருகின்றனர்.

கரோனாவுக்கு எதிராக நம்முடைய போர் முடிய நீண்டகாலம் இருக்கிறது. கரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பு மருந்து கண்டுபிடித்து புழக்கத்துக்கு வரும் வரை முகக்கவசம், சமூக விலகலைக் கடைப்பிடிக்க வேண்டும், விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். சமூக விலகலோடு இருந்தால்தான் கரோனா பரவுலதைத் தடுக்க முடியும்''.

இவ்வாறு அமித் ஷா தெரிவித்தார்.

SCROLL FOR NEXT