முன்னாள் மத்திய அமைச்சர் ரகுவன்ஸ் பிரசாத் சிங் : கோப்புப்படம் 
இந்தியா

பிஹாரில் லாலு கட்சிக்குப் பின்னடைவு: ராஷ்ட்ரிய ஜனதா தளத்திலிருந்து துணைத் தலைவர் ரகுவன்ஸ் பிரசாத் சிங் திடீர் விலகல்

பிடிஐ

பிஹார் மாநிலத்தில் அடுத்த இரு மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கும் நிலையில் லாலு பிரசாத் யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியிலிருந்து மூத்த தலைவரும், துணைத் தலைவருமான ரகுவன்ஸ் பிரசாத் சிங் விலகுவதாக இன்று திடீரென அறிவித்துள்ளார்.

தேர்தல் நடைபெற உள்ள நேரத்தில் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ரகுவன்ஸ் பிரசாத் விலகியது ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சிக்குப் பெரும் பின்னடைவாகவே அமையும் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போது கரோனா பாதிப்பு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் ரகுவன்ஸ் பிரசாத் சிங், சிகிச்சை முடிந்து திரும்பியதும் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இணைய உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏனென்றால், லாலு பிரசாத் சிறைக்குச் சென்றபின், அவரின் மகன் தேஜஸ்வி யாதவ், மனைவி ராப்ரி தேவி கட்சியை நடத்துவதில் ரகுவன்ஸ் பிரசாத்துக்கு கருத்து மோதல்கள் ஏற்பட்டதால், ஒதுங்கி இருந்தார்.

மேலும், கரோனா பாதிப்பு ஏற்பட்டபின், ரகுவன்ஸ் பிரசாத் டெல்லிக்குச் செல்லவும், அங்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் சிறப்பான சிகிச்சையளிக்கவும் முதல்வர் நிதிஷ் குமார் உதவி செய்தார்.

இதனால் ரகுவன்ஸ் பிரசாத் மருத்துவமனையில் இருந்து குணமடைந்து வெளியே வந்ததும் நிதிஷ் குமார் கட்சியில் இணையலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், ஊழல் வழக்கில் சிறையில் இருந்து வரும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவுக்கு, ரகுவன்ஸ் பிரசாத் கடிதம் எழுதியுள்ளார்.

அதில், “முன்னாள் முதல்வரும், சோசலிஸ்ட் தலைவருமான ஜானக்கியபூரி கபூர் தாக்கூர் இறந்தபின் கடந்த 32 ஆண்டுகளாக உங்களுடன் இருந்தேன். இப்போது இல்லை. நான் கட்சித் தலைவர்களிடமும், தொண்டர்களிடமும், மக்களிடம் மிகுந்த அன்பைப் பெற்றேன். இப்போது தயவுசெய்து மன்னித்துவிடுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சியின்போது ரகுவன்ஸ் பிரசாத் பல்வேறு துறைகளுக்கு அமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் கடந்த ஜூன் மாதம் ரகுவன்ஸ் பிரசாத் தனது ராஜினாமா கடிதத்தை லாலுவுக்கு அனுப்பியபோது அதை லாலு பிரசாத் நிராகரித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT