ஐக்கிய ஜனதா தளம் கட்சி எம்.பி. ஹரிவன்ஸ் : கோப்புப்படம் 
இந்தியா

மாநிலங்களவைத் துணைத் தலைவர் பதவி: என்டிஏ சார்பில் நிதிஷ் குமார் கட்சி எம்.பி. ஹரிவன்ஸ் வேட்புமனுத் தாக்கல்

பிடிஐ

மாநிலங்களவைத் துணைத் தலைவர் பதவிக்கு ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் எம்.பி. ஹரிவன்ஸ், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

மாநிலங்களவைத் துணைத் தலைவராக ஏற்கெனவே இருந்த ஹரிவன்ஸ் பதவிக்காலம் முடிந்தது. அதுமட்டுமல்லாமல் அவரின் மாநிலங்களவை எம்.பி. பதவிக்காலமும் முடிந்ததையடுத்து, மீண்டும் எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில், துணைத் தலைவர் பதவிக்கு 2-வது முறையாக மீண்டும் ஹரிவன்ஸ் போட்டியிடுகிறார்.

மாநிலங்களவையின் பாஜக தலைவர் தவார்சந்த் கெலாட், சிரோன்மணி அகாலி தளம் தலைவர் நரேஷ் குஜ்ரால் ஆகியோர் முன்னிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் ஹரிவன்ஸ் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார். வேட்புமனுத் தாக்கல் செய்வது 7-ம் தேதி தொடங்கி 11-ம் தேதிவரை நடக்கிறது.

கடந்த 2018-ம் ஆண்டு நடந்த தேர்தலின்போது, காங்கிரஸ் கட்சியின் எம்.பி. ஹரிபிரசாத்தைத் தோற்கடித்து மாநிலங்களவைத் துணைத் தலைவராக ஹரிவன்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த முறையும் ஹரிவன்ஸ் எந்தவிதமான சிக்கலின்றி தேர்வு செய்யப்படுவார். அவருக்குத் தேவையான 140 எம்.பி.க்கள் ஆதரவு இருக்கிறது. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், டிஆர்எஸ், பிஜேடி ஆகிய கட்சிகள் ஆதரவு அளிக்கும் என்று பாஜக தரப்பில் நம்பப்படுகிறது.

மாநிலங்களவையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பலம் படிப்படியாக அதிகரித்து வருகிறது.

இதற்கிடையே நேற்று முன்தினம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அப்போது, வரும் மழைக்காலக் கூட்டத்தொடரில் எவ்வாறு செயல்படுவது என்று ஆலோசிக்கப்பட்டது.

அதில் முக்கியமாக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தரப்பில் அனைவரின் ஒருமித்த கருத்துடன், மாநிலங்களவைத் துணைத் தலைவர் தேர்தலில் கூட்டு வேட்பாளரை நிறுத்தவும் திட்டமிடப்பட்டது.

இது தொடர்பாக விரைவில் எதிர்க்கட்சிகளுடன் பேசி கூட்டு வேட்பாளர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர் அறிவிக்கப்படுவது குறித்து எந்தத் தகவலும் இல்லை.

SCROLL FOR NEXT