நடிகை கங்கணா ரணாவத்: கோப்புப் படம். 
இந்தியா

உரிமையாளர் இல்லாத வீட்டுக்குள் ஏன் சென்றீர்கள்? நடிகை கங்கணா ரணாவத் வீட்டை இடிக்கத் தடை: மும்பை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

பிடிஐ

நடிகை கங்கணா ரணாவத் வீட்டின் ஒரு பகுதியை இடிப்பதற்கு இடைக்காலத் தடை விதித்து மும்பை மாநகராட்சிக்கு மும்பை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

வீட்டின் உரிமையாளர்கள் இல்லாத நிலையில் அவர்களின் அனுமதியில்லாமல் வீட்டுக்குள் சென்று இடிப்பதற்கு யார் அனுமதி கொடுத்தது? இதற்கு விளக்கமளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நடிகர் சுஷாந்த் தற்கொலை விவகாரத்தில் நடிகை கங்கணா ரணாவத் மும்பையைப் பற்றியும், மகாராஷ்டிரா மாநிலம் குறித்தும் அவதூறாகப் பேசி கருத்துத் தெரிவித்தார்.

மும்பையை மினி பாகிஸ்தான் என்று கூறியதற்கு கங்கணா மன்னிப்புக் கோர வேண்டும். அவ்வாறு மன்னிப்புக் கேட்காவிட்டால், மும்பைக்கு வரக்கூடாது என்று சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் எச்சரித்தார். இதனால் சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத்துக்கும், கங்கணா ரணாவத்துக்கும் இடையே ட்விட்டரில் கடுமையாக வாக்குவாதம் நடந்தது.

கங்கணா வீடு இடிக்கப்பட்ட காட்சி

இதனால் நடிகை கங்கணா ரணாவத்துக்கும், மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா கட்சிக்கும் இடையிலான மோதல் வெடித்தது. இந்தச் சூழலில், நடிகை கங்கணா ரணாவத்துக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பை மத்திய அரசு வழங்கியதையும், சிவசேனா தலைவர்கள் கண்டித்தனர். அரசியல் உள்நோக்கம் கொண்டது என விமர்சித்தனர்.

இந்தச் சூழலில் மும்பை மாநகராட்சி சார்பில் ஒரு குழுவினர், மும்ரை பாந்த்ராவில் உள்ள பாலி ஹில் பகுதியில் உள்ள கங்கணா ரணாவத் வீட்டில் அனுமதியின்றி பல்வேறு கட்டிங்கள் கட்டப்பட்டதற்கு 24 மணிநேரத்தில் விளக்கம் கேட்டு, நேற்று முன்தினம் நோட்டீஸ் ஒட்டிச் சென்றனர்.

ஆனால், கங்கணா ரணாவத் தரப்பில் எந்தப் பதிலும் அளிக்கப்படவில்லை. மும்பை மாநகராட்சி அதிகாரிகள் அளித்த கெடு முடிந்ததையடுத்து, இன்று காலை மண் அள்ளும் எந்திரத்தின் உதவியுடன் கங்கணா வீட்டில் அனுமதியின்றி செய்யப்பட்டிருந்த மாற்றங்களை இடித்து அதிகாரிகள் அகற்றினர்.

மும்பை உயர் நீதிமன்றம் : கோப்புப் படம்.

தனது வீடு இடிக்கப்படுவதை நிறுத்த மும்பை மாநகராட்சிக்கு உத்தரவிடக் கோரி நடிகை கங்கணா ரணாவத் சார்பில் மும்பை உயர் நீதிமன்றத்தில் இன்று அவசர மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதி எஸ்ஜே. கதாவாலா முன் இன்று விசாரிக்கப்பட்டது. அப்போது மும்பை மாநகராட்சி சார்பில் ஆஜரான வழக்கறிஞரிடம், ''வீட்டின் உரிமையாளர் இல்லாதபோது யாருடைய அனுமதியுடன் வீட்டுக்குள் சென்று கட்டிடங்களை இடித்தீர்கள்? யார் உங்களுக்கு அனுமதி கொடுத்தது என்பதற்கு விளக்கம் வேண்டும்.

வீட்டை இடிக்கும் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும். இந்த வழக்கு நாளை (வியாழக்கிழமை) மீண்டும் விசாரிக்கப்படும்'' என உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT