கேரள தங்க கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷ், நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் தற்போது அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
திருச்சூர் மாவட்ட விய்யூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஸ்வப்னா சுரேஷ் நெஞ்சுவலி என்று கூறியதால் திருச்சூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரது ஈசிஜியில் சிறிய வேறுபாடு காரணமாக அவசர சிகிச்சை பிரிவில் கண்காணிப்பில் உள்ளார். இருப்பினும் அவர் உடல்நிலை மோசமில்லை என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து 14.82 கோடி ரூபாய் மதிப்பிலான 30 கிலோ தங்கம் இரும்பு குழாய்களில் மறைத்து, கேரளாவில் உள்ள அதன் தூதரக முகவரிக்கு கடத்தப்பட்டது. இதனை கண்டறிந்த சுங்க பிரிவு போலீசார் இக்கடத்தலில் ஈடுபட்ட தூதரக முன்னாள் ஊழியர் ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர், சரித் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இதில் ஸ்வப்னா சுரேஷ், கேரள முதல்வரின் செயலராக இருந்து நீக்கப்பட்டுள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவசங்கருடன் உறவை ஏற்படுத்தி கொண்டு பல மோசடிகளில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. போலியான டிகிரி சான்றிதழ் தந்து தான் அவர் அரசு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்துள்ளார். அதற்காக மோசடி வழக்கிலும் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.