மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டம், ஷிப்பூரை சேர்ந்தவர் லட்சுமி. மனநலம் பாதிக்கப்பட்ட இவர், 15 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனார். பல இடங்களில் குடும்பத்தினர் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
பல்வேறு மாநிலங்களில் சுற்றித் திரிந்த லட்சுமி, எப்படியோ சத்தீஸ்கர் மாநிலத்துக்கு சென்றுள்ளார். கடந்த 2017 ஏப்ரலில் போலீஸ்காரர் ஒருவர், அவரை மீட்டு சத்தீஸ்கரின் கோர்பா மாவட்ட மனநல மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் மனநலம் தேறிய லட்சுமி, தனது குடும்பம், முகவரியை கூறியுள்ளார். இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் சத்தீஸ்கர் மாநில சட்ட ஆணையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆணையத்தின் நிர்வாகிகள் மேற்கு வங்க மாநில சட்ட ஆணையத்தின் உதவியுடன் லட்சுமியின் குடும்பத்தை தேடி கண்டுபிடித்தனர்.
இதையடுத்து மேற்கு வங்கத்துக்கு ரயிலில் அனுப்பி வைக்கப்பட்ட லட்சுமி, குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார். இதுகுறித்து மேற்கு வங்க சட்ட ஆணைய செயலாளர் துர்கா கூறும்போது, "லட்சுமிக்கு திருமணமாகி ஒரு மகள் உள்ளார். கணவர் கைவிட்ட நிலையில் லட்சுமி காணாமல் போயுள்ளார். தற்போது லட்சுமியின் தம்பி கோபாலிடம் அவரை ஒப்படைத்துள்ளோம்" என்று தெரிவித்தார்.