இந்தியா

டெல்லியில் நள்ளிரவு சோதனை வழக்கு: சோம்நாத் பாரதி மனு மீது 30-ல் விசாரணை

பிடிஐ

கடந்த ஆண்டு தெற்கு டெல்லியில் நள்ளிரவில் சோதனை நடத்தியது தொடர்பான வழக்கில், போலீஸாருக்கு எதிராக வழக்கு தொடுக்கக் கோரி ஆம் ஆத்மி எம்எல்ஏ சோம்நாத் பாரதி தாக்கல் செய்துள்ள மறு ஆய்வு மனு மீது 30-ம் தேதி விசாரணை நடைபெறும் என டெல்லி நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்த மனு கூடுதல் செஷன்ஸ் நீதிபதி புபேஷ் குமார் முன்னிலை யில் நேற்று விசாரிக்கப்படும் என கூறப்பட்டிருந்தது. ஆனால், நீதிபதி விடுமுறையில் இருந்ததால், 30-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த வழக்கில் தன்னை சேர்த்ததற்காக போலீஸார் மீது வழக்கு பதிவு செய்யக் கோரி பாரதி தாக்கல் செய்த மனுவை கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் தள்ளுபடி செய்தார். மத்திய அல்லது மாநில அரசுகளின் அனுமதி இல்லாமல் தன் மீது வழக்கு தொடுக்க முடியாது என பாரதி தனது மனுவில் கூறியிருந்தார். இதையடுத்து மறு ஆய்வு மனு தாக்கல் செய்துள்ளார்.

தெற்கு டெல்லியின் கிர்கி விரிவாக்கப் பகுதியில், போதை மருந்து கடத்தல், பாலியல் தொழில் நடைபெறுவதாகக் கூறி கடந்த ஆண்டு ஜனவரி 15-ம் தேதி, அப்போதைய சட்ட அமைச்சர் சோம்நாத் பாரதி தலைமையிலான குழுவினர் நள்ளிரவில் சோதனை நடத்தினர். அப்போது, அங்குள்ள ஆப்ரிக்க பெண்களிடம் அத்துமீறி நடந்துகொண்டதாக புகார் எழுந் தது. இந்நிலையில், பாரதி மீது சட்ட நடவடிக்கை எடுக்க டெல்லி அரசு கடந்த சில தினங்களுக்கு முன்பு அனுமதி வழங்கியது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT