அருணாச்சலப் பிரதேசத்தின் எல்லைக் கிராமத்தைச் சேர்ந்த 5 பேரை சீன ராணுவம் கடத்திச் சென்றிருக்கலாம் என்ற ஐயங்களுக்கு இடையில் சீன ராணுவம் அவர்களைப் பற்றி தங்களுக்கு எந்தத் தகவலும் தெரியாது என்று கைவிரித்துள்ளது.
கடந்த சனிக்கிழமையன்று ஆளும் கட்சி எம்.பி. தபீர் கவோ எல்லை கிராமத்திலிருந்து 5 இளைஞர்கள் காணாமல் போனதாகத் தெரிவித்தார். இவர்களை சீன ராணுவம் கடத்திச் சென்றது என்று அவர் தன் சமூகவலைத்தளப் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
இதற்கு ஒருநாள் சென்று, மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு சீன ராணுவத்திடமிருந்து தகவல் எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம் என்றார்.
இந்நிலையில் சீன வெளியுறவு அமைச்சகம் செய்தித் தொடர்பாளர், “இது பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது” என்று தெரிவித்தார். மேலும் சீனா ஒரு போதும் அருணாச்சலப் பிரதேசத்தை அங்கீகரிக்கவில்லை” என்றார்.
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் கட்டுப்பாட்டு எல்லையருகே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் இந்த ஐவர் மாயமானது புதிராக உள்ளது என்று அருணாச்சல் டைம்ஸ் தெரிவித்துள்ளது. அப்பர் சுபன்ஸ்ரீ மாவட்டத்தின் காட்டுப்பகுதியில் அவர்கள் வேட்டையாடச் சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது. அந்தப் பகுதியில் அதிகம் உள்ள தாகின் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள் இந்த ஐவரும்.
வேட்டையாடச் சென்ற குழுவிலிருந்து தப்பித்த இருவர் 5 பேர் கடத்தப்பட்டதாக போலீஸாரிடம் புகார் அளித்தனர்
அனைத்து தாகின் மாணவர்கள் அமைப்பு சீன ராணுவத்தைத் தாக்கிப் பேசியதோடு மத்திய அரசையும் சாடியுள்ளது, அதாவது லடாக், ஜம்மு காஷ்மீர் பகுதியிலேயே அவர்கள் கவனம் முழுதும் உள்ளது. சீனாவுடனான எங்கள் எல்லைப்பகுதியில் பாதுகாப்பு பற்றி யோசிக்கவில்லை என்று விமர்சனம் செய்துள்ளனர்.