கேரள முதல்வர் பினராயி விஜயன் : கோப்புப்படம் 
இந்தியா

அதானி குழுமத்திடம் திருவனந்தபுரம் விமானநிலையம்: நாடாாளுமன்றத்தில் மத்திய அரசுக்கு நெருக்கடி தர கேரள எம்.பி.க்கள் முடிவு: சசி தரூர் எதிர்ப்பு

பிடிஐ

திருவனந்தபுரம் விமானநிலையத்தை அதானி குழுமத்துக்கு 50 ஆண்டுகள் குத்தகைக்கு விடும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்த கேரள எம்.பி.க்கள் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் இந்த விவகாரத்தை எழுப்பி நெருக்கடி கொடுக்க ஒருமனதாக முடிவு செய்துள்ளனர்.

ஆனால், கேரள எம்.பி.க்கள் முடிவுக்கு காங்கிரஸ் கட்சியின் எம்.பி.சசி தரூர் மட்டும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

இந்திய விமான நிலைய ஆணையத்தின் ஜெய்ப்பூர், குவகாத்தி, திருவனந்தபுரம் ஆகிய மூன்று விமான நிலையங்களை பொதுத்துறை, தனியார் கூட்டு முயற்சியில் 50 ஆண்டுகளுக்கு அதானி குழுமத்திடம் குத்தகைக்கு விட கடந்த மாதம் மத்திய அமைச்சரவையால் ஒப்புதல் வழங்கப்பட்டது.

திருவனந்தபுரம் விமானநிலையத்தின் பராமரிப்பை அதானி குழுமத்திடம் ஒப்படைத்த மத்திய அரசின் முடிவுக்கு ஒத்துழைப்பது கடினம் எனக் கோரி கேரள முதல்வர் பினராயி விஜயன் இருமுறை பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். மேலும், மத்தியஅரசு தனது முடிவை திரும்பப் பெறக்கோரி கேரளச் சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் அனைத்துக் கட்சிகளின் எம்.பி.க்களின் கூட்டம் நேற்று நடந்தது.

இந்தக் கூட்டத்தில், வரும் 14-ம் தேதி தொடங்கும், நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் திருவனந்தபுரம் விமானநிலையத்தை அதானி குழுமத்துக்கு ஒப்படைத்த விவகாரத்தை எழுப்ப முடிவு செய்யப்பட்டது.

மத்திய அ ரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் எம்.பிக்கள் செயல்பட வேண்டும் என கேரளாவில் அனைத்து கட்சியின் எம்.பி.க்கள் தரப்பில் முடிவு செய்யப்பட்டது.

காணொலி மூலம் நடந்த இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முதல்வர் பினராயி விஜயன் உள்பட அனைத்து கட்சி எம்.பி.க்களும் பங்கேற்றனர்.

அப்போது முதல்வர் பினராயி விஜயன் பேசுகையில் “ அதானி குழுமத்துக்கு திருவனந்தபுரம் விமானநிலையத்தின் பராமரிப்பை ஒப்படைத்தால் மத்திய அரசுக்கு கேரள அரசுஒத்துழைப்பு தராது. விமானநிலையத்தில் பெரும்பங்கு கேரள அரசுக்கு இருப்பதால், அதை பராமரிக்கும் பொறுப்பை கேரள அரசிடமே ஒப்படைக் வேண்டும்.

அதானி குழுமம் அளித்த அதே ஏலத் தொகையை கேரள அரசு அளிக்கவும் தயாராக இருக்கிறது. கொச்சி, கண்ணூர் விமானநிலையத்தை தனியார் கூட்டுடன் பராமரித்த அனுபவம் கேரள அரசுக்கு இருக்கிறது” எனத் தெரிவித்தார்.

மேலும், பாரத் பெட்ரோலியம் கழகத்தின் பங்குகளை விற்கும் மத்திய அரசின் முடிவுக்கும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. கொச்சியில் உள்ள பிபிசிஎல் நிறுவனம், கேரள அரசின் உதவியோடு அமைக்கப்பட்டுள்ளது.

ஆதலால், அந்த நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்யவும் நாடாளுமன்றத்தில் எதிர்ப்புத் தெரிவிக்க எம்.பி.க்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

அதுமட்டுமல்லாமல் மாநிலத்துக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீடு ரூ.7 ஆயிரம் கோடியை தர வேண்டும், வங்கிகளில் கடன் செலுத்தும் அவகாசத்தை டிசம்பர் 31-ம் தேதிவரை நீட்டிக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் வலியுறுத்த எம்.பி.க்கள் முடிவு செய்தனர்.

ஆனால் திருவனந்தபுரம் விமானநிலைய விவகாரத்தில் தொடக்கத்திலிருந்தே கேரள அரசின் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வரும் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், நேற்றும் தனது நிலைப்பாட்டிலிருந்து மாறவில்லை எனக் கூறப்படுகிறது.

அதானி குழுமத்துக்கு விமானநிலையத்தை வழங்கும் மத்திய அரசின் முடிவுக்கு ஆதரவாக இருப்பதாகவும், விமானநிலையத்தின் வளர்ச்சியை மனதில்கொண்டே ஆதரிப்பதாகவும் சசி தரூர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT