இந்தியா

கேள்வி நேரம் ரத்தானதால் அனைத்து கட்சி எம்.பிக்களுக்கும் சம இழப்பு: பிஆர்எஸ் சட்டமன்ற ஆராய்ச்சி அமைப்பின் தலைவர் பி.ஆர்.மாதவன் பேட்டி

ஆர்.ஷபிமுன்னா

வரும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் கேள்வி நேரம் ரத்தானது அனைத்து கட்சி எம்.பி.க்களுக்கும் இழப்பே என பி.ஆர்.எஸ் சட்டமன்ற அமைப்பு தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களின் செயல்பாடுகளை ஆய்வுசெய்து புள்ளிவிவரங்களுடன் வெளியிடும் இந்த அமைப்பின் தலைவரான பி.ஆர்.மாதவன் ‘இந்து தமிழ்’ நாளேட்டிற்கு அளித்தசிறப்புப் பேட்டி:

கரோனா வைரஸ் பரவல் காலத்தில் நடத்தப்படும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் கேள்வி நேரம் ரத்து செய்யப்படுவதன் பின்னணியில் அரசியல் காரணங்கள் இருப்பதாகக் கருதுகிறீர்களா?

இதில் அரசியல் காரணங்கள் உள்ளதா எனத் தெரியவில்லை. ஏனெனில், சமூக நலனுக்கான எங்கள் அமைப்பு அரசியல்ரீதியான நோக்கில் நாடாளுமன்ற ஆய்வுகளையும், கணக்கெடுப்புகளையும் செய்வதில்லை. கேள்வி நேரம் என்பது அனைத்து எம்.பி.க்களுக்கும் பொதுவானது என்பதால் அதில் யாருக்கும் சார்பாகவோ, எதிராகவோ மத்திய அமைச்சர்கள் பதில் அளிக்க முடியாது.

ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி ஆகியோரில் கேள்வி நேரம் இடம் பெறாததால் இழப்பு யாருக்கு அதிகம்?

நாடாளுமன்றத்தில் நேரடியாகபங்குகொள்ளும் சாத்தியம் இல்லாத மக்கள் தங்கள் பிரதிநிதியாக எம்.பி.க்களை தேர்ந்தெடுத்து அங்கு அனுப்புகின்றனர். எனவே,கேள்வி நேரம் ரத்தானது ஆள்பவர்கள், எதிர்க்கட்சிகள் என அனைத்து கட்சிகளின் எம்.பி.க்களுக்கும் சமஇழப்பு ஆகும். நாடாளுமன்ற கூட்டங்களில் எம்.பி.க்கள் வழியாக பொதுமக்களுக்கு பதில் அளிக்க மத்திய அமைச்சர்கள் கடமைப்பட்டுள்ளனர்.

கேள்வி நேரத்தின் முக்கியப் பலன்கள் என்ன?

எம்.பி.க்கள் சார்ந்த மாநிலம் மட்டுமின்றி, அவர்களது தொகுதிஅளவிலும் கேள்வி நேரத்தில் பதில்கள் கிடைப்பது பெரிய பலன் ஆகும். இந்த நல்ல வாய்ப்பினை அனைத்து எம்.பி.க்களும்முறையாகப் பயன்படுத்த வேண்டும். இதற்கு நாடாளுமன்றவரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வைநினைவில் கொள்ளலாம். 1950-களில் பிரதமராக ஜவஹர்லால்நேரு இருந்தபோது நிதி அமைச்சராக டி.டி.கே.கிருஷ்ணமாச்சாரி இருந்தார். அவரிடம் ஆளும் காங்கிரஸ் எம்.பி எழுப்பியதன் துணைக்கேள்விகளால் இந்திய காப்பீடு நிறுவனத்தின் முந்த்ரா ஊழல் வெளியானது. இதற்கு பொறுப்பு ஏற்று கிருஷ்ணமாச்சாரி தன் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

வரும் கூட்டத்தொடரில் அளிக்கப்படும் எழுத்துப்பூர்வ பதில்களால் பொதுமக்களுக்கு நன்மை பெற்றுத்தர எம்.பி.க் களால் முடியுமா?

துணைக் கேள்விகளுக்கு வாய்ப்பில்லை என்பதால் எழுத்துப்பூர்வ பதில்களால் முழுப்பயன் கிடைக்காது. எனினும், இதில் கூட புள்ளிவிவரங்கள் அளிக்கப்படும். இதனால், பதில்களின் தன்மைக்கு ஏற்ப எம்.பி.க்கள் சாதுர்யமான கேள்விகள் எழுப்பி அதிகபட்ச பலனை பெற முயற்சிக்க வேண்டும்.

நாடாளுமன்றத்தில் இருதரப்பு எம்.பி.க்களும் கேள்வி நேரத்தை முறையாகப் பயன் படுத்துகிறார்களா? இதை செய்யாதவர்களை செயல்பட வைப்பது எப்படி?

இக்கூட்டங்களின் ஒவ்வொரு நேரத்திலும் செயல்படாத எம்.பிக்கள் சிலர் அமைந்து விடுவது என்பது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. இதுபோன்றவர்களை தொகுதிவாசிகளும், பத்திரிகை களும் தான் சரிசெய்ய முடியும்.நாடாளுமன்ற நடவடிக்கைகளின் முழு விவரமும் அதன் இணையதளத்தில் வெளியாகி விடுகிறது. இதை பொதுமக்களும் படித்து அறிந்து கொள்வது அவசியம். ஒப்பந்த அடிப்படையிலான தன்பணியாளர்களை அவர்கள் நிறுவனம் மதிப்பீடு செய்வது போல், எம்.பிக்களை வருடந்தோறும் மதிப்பீடு செய்து சமூகவலைதளம் உள்ளிட்ட பல இடங்களில் சுட்டிக்காட்டப்பட வேண்டும். தவறிழைத்தபின்பும் மறுமுறை போட்டியிடுபவர்களை பொதுமக்கள் தேர்தலில்புறக்கணித்தால் புதிய எம்.பி.க்கள் சரியாக நடந்துகொள்ள வாய்ப்பு உண்டு.

பல கூட்டங்களில் என்ன கேள்வி கேட்பது எனக் கூட தெரியாமல் சில எம்.பி.க்கள் திணறுவதாகக் கூறப்படுகிறதே? இதுபோன்றவர்களுக்கு நீங்கள் கூறும் ஆலோசனை என்ன?

நாடாளுமன்றத்தில் எழுப்ப வேண்டிய விஷயங்கள் தொடர்பாக தனது இணையதளம், சமூகவலைதளக் கணக்குகள் எனபல்வேறு வகைகளில் பொதுமக்களிடம் கேள்விகளுக்கான ஆலோசனை பெறும் எம்.பி.க்கள் பலரும் உண்டு.

இந்தமுறையை அனைவரும் பயன்படுத்தினால் அதிகப் பலன் கிடைக்கும். இதையும் செய்யாதவர்களுக்கு பொதுமக் களே தானாக முன்வந்து அதை மனுக்களாக அளிப்பதைத் தவிர வேறு வழியில்லை.

SCROLL FOR NEXT