கரோனா பரவலைக் கட்டுப்படுத்த பிரதமர் மோடி தலைமையிலான அரசு என்ன திட்டம் வைத்திருக்கிறது, கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதில் தோல்வி அடைந்துவிட்டது என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி கேள்வி எழுப்பியுள்ளது.
உலகளவில் கரோனா வைரஸ் பரவலில் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் முதல் இரு இடங்களில் அமெரிக்காவும், பிரேசில் நாடும் இருந்தன. ஆனால், கடந்த சில நாட்களாக பிரேசிலில் கரோனா பரவல் குறைந்து வருகிறது, மாறாக இந்தியாவில் நாளுக்கு நாள் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது.
இதனால் கரோனா பாதிப்பில் பிரேசிலைப் பின்னுக்குத் தள்ளி இந்தியா 2-வது இடத்தை இன்று பிடித்தது. இந்தியாவில் கரோனா பாதிப்பு ஏறக்குறைய 42 லட்சத்தையும், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 70 ஆயிரத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைமைச் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா காணொலி வாயிலாக இன்று ஊடகங்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
கரோனா பரவல் கட்டுக்கடங்காமல் செல்லவே, மத்திய அரசு, மக்கள் தங்களைத் தாங்களே காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்று கைவிட்டுவிட்டது. தோல்வியுற்ற தலைமை, திறமையின்மை,அலட்சியம் ஆகியவைதான் இந்த சூழலில் நாடு நிற்பதற்கு காரணம்.
பரிசோதனை, கண்டுபிடித்தல், தனிமைப்படுத்துதல், சிகிச்சை ஆகிய 4 கொள்கைகள் மூலம் கரோனா கட்டுப்படவில்லை என காங்கிரஸ் கட்சியும், பல்வேறு தொற்றுநோய் தடுப்பு வல்லுநர்களும் பல முறை மத்திய அரசை எச்சரித்தோம்.
பரிசோதனையை அதிகரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டபோது, எங்களின் ஆலோசனை புறக்கணிக்கப்பட்டது. ஊரடங்கு காலத்தில் கூட கரோனாவில் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்புள்ளவரக்ளை கண்டுபிடித்து சிகிச்சையளியுங்கள் என்று கூறியும் போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த இந்த தேசம் எந்தப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்பதற்கு இந்த தேசத்தின் மக்களுக்குப் பிரதமர் மோடி பதில் அளிக்க வேண்டும்.
தோல்வி அடைந்த தலைமைக்கு பிரதமர் மோடி பதில் அளிப்பாரா. கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்துவருவரை எவ்வாறு தடுத்து நிறுத்தப்போகிறது.
நாட்டின் பொருளாதாரம் மூழ்கிக்கொண்டு வருகிறது. இதிலிருந்து பொருளாதாரத்தை மீட்க மோடி அரசிடம் ஏதாவது தீர்வு இருக்கிறதா அல்லது கடவுள் மீது பழிபோடப்போகிறதா.
கரோனா வைரஸ் தற்போது கிராமங்கள், சிறுநகரங்களிலும் பரவத் தொடங்கிவிட்டது. ஆனால், மோடி அரசு அறியாமையிலும், அலட்சத்திலும் இருக்கிறது. இந்த அலட்சியம் மிகவும் ஆபத்தானது. ஏனென்றால், நாட்டில் உள்ள 65 சதவீத மக்கள்தொகை கிராமப்புறங்களில் வசிக்கின்றனர்.
ஆனால், 35 சதவீதம் மட்டுமே மருத்துவமனையில் படுக்கைகள் உள்ளன, 20 சதவீதம் மட்டுமே மருத்துவர்கள் இருக்கிறார்கள். இந்த வேகத்தில் கரோனா வைரஸ் பரவினால், மோசமான பேரழிவு விளைவுகளை வரும்நாட்களில் உருவாக்கும் என எச்சரி்க்கிறோம்.
பெரும்பாலான தொற்றுநோய் தடுப்பு வல்லுநர்கள் கணிப்பின்படி, இந்தியாவில் கரோனா வைரஸ் 2-வது அலையால் பெரிய பாதிப்பு ஏற்படும் என்று தெரிவிக்கிறார்கள். சமூகப்பரவல் தொடங்கிவிட்டது என்று எச்சரிக்கிறார்கள். ஆனால், மோடி அரசு தொடர்ந்து விழி்ப்புணர்வு இல்லாமல், அதை ஏற்க மறுத்து வருகிறது.
கரோனா வைரஸின் படுகுழியில் இந்தியா வீழ்ந்துள்ள நிலையில் அதன் தீவிரம் புரியுாமல் மோடிஜி மயில்களுக்கு உணவளிப்பதில் மும்முரமாக இருக்கிறார்.
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க போதுமான தடுப்பு நடவடிக்கைகளை மத்திய அ ரசு எடுக்கவில்லை, லாக்டவுன் நடவடிக்கையும் போதுமான பலன்களை அளிக்கவில்லை. இந்தியாவில் கரோனாவில் ஒரு லட்சத்து 75 ஆயிரம் பேர் வரை உயிரிழக்க நேரிடும் என்று வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள்.
மோடி அரசு தொலைக்காட்சிகளில் கதைகளை வென்றெடுப்பதிலும், தட்டுகளில் ஒலி எழுப்பதிலும், கைதட்டுவதிலும், விளக்குகளை எரியவதிலும்தான் கவனமாக இருக்கிறது. ஆனால், கரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதிலும், பொருளாதாரத்தை காப்பாற்றுவதிலும் எந்த உறுதியான நடவடிக்கையும் இல்லை
இவ்வாறு சுர்ஜேவாலா தெரிவித்தார்.