சிவேசனா மூத்த தலைவரும் எம்.பி.யுமான சஞ்சய் ராவத் அகமதாபாத் நகரை மினி பாகிஸ்தான் என்று கூறியதற்கு குஜராத் மக்களிடமும், அகமதாபாத் மக்களிடமும் மன்னிப்புக் கோர வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.
பாலிவுட் நடிகர் சுஷாநத் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் 14-ம் தேதி அவரின் இல்லத்தில் தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கு குறித்து பாலிவுட் பிரபலங்கள் பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை நடிகை கங்கணா ரணாவத் ட்விட்ரில் ஒரு கருத்தைப் பதிவிட்டார்.
அதில், “ சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் எனக்கு வெளிப்படையாக மிரட்டல் விடுத்து என்னை மும்பைக்கு வரக்கூடாது என்கிறார். மும்பை ஏன் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போன்று மாறுகிறது” எனத் தெரிவித்திருந்தார்.
இதற்கு பதில் அளித்து நேற்று பேட்டியளித்த சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத், “மகாராஷ்டிராவிடமும், மும்பையிடமும் கங்கணா ரணாவத் மன்னிப்புக் கோர வேண்டும். முதலில் கங்கணா மன்னிப்புக் கோரட்டும்.
அதன்பின் அவரை மன்னிப்பது குறித்துப் பேசுவேன். மும்பை மினி பாகிஸ்தான் என்று கங்கணா சொல்கியிருக்கிறார். நான் கேட்கிறேன், குஜராத்தின் அகமதாபாத்தை மினி பாகிஸ்தான் என்று சொல்வதற்கு கங்கணாவுக்குத் துணிச்சல் இருக்கிறதா?
மும்பையில் வாழ்பவர்கள், பணியாற்றுபவர்கள், மும்பையைப் பற்றியும் மகாராஷ்டிரா பற்றியும் மராத்தி மக்கள் பற்றியும் தவறாகப் பேசினால், முதலில் மன்னிப்புக் கேளுங்கள் என்றுதான் நான் முதலில் கூறுவேன்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அகமதாபாத் நகரை மினி பாகிஸ்தான் என்று கூறிய சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் குஜராத், அகமதாபாத் மக்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து குஜராத் மாநில பாஜக செய்தித்தொடர்பாளர் பாரத் பாண்ட்யா நேற்று அளித்த பேட்டியில் “ சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் அகமதாபாத் நகரை மினி பாகிஸ்தான் என்று அழைத்து மாநிலத்தையும், எங்கள் மாநிலமக்களையும் அவமானப்படுத்திவிட்டார்.
அகமதாபாத் நகரை மினிபாகிஸ்தான் என்று கூறியதறக்கு குஜராத் மக்களிடமும், அகமதாபாத் மக்களிடமும் மன்னிப்புக் கோர வேண்டும்.
எந்த வாய்ப்பு கிடைத்தாலும், அதைப் பயன்படுத்தி பொறாமை, வெறுப்பு மற்றும் தீமை எண்ணத்துடன் குஜராத் மக்களையும், குஜராத் மாநிலத்தையும், குஜாரத் தலைவர்களையும் அவமானப்படுத்தும் செயலை சிவசேனா நிறுத்த வேண்டும்.
குஜாரத்தைச் சேர்ந்தவர்கள்தான் மகாத்மா காந்திஜி, சர்தார்படேல் என்பதை மறந்துவிடக்கூடாது. 562 சிற்றரசுகளை ஒன்றாக இணைத்து இந்தியாவை ஒற்றுமையாகக் கட்டமைத்த பெருமைக்குரியவர் சர்தார் வல்லபாய் படேல். ஜுனாகாத், ஹைதராபாத் ஆகியவற்றை பாகிஸ்தான் செல்லாமல் தடுத்து, இந்தியாவுடன் தக்கவைத்து, தனது வலிமையையும் துணிச்சலையும் வெளிப்படுத்தியவர் சர்தார்படேல்.
படேலின் கனவான காஷ்மீர் மாநிலத்தை இந்தியாவின் பகுதியாக இணைக்க வேண்டும் என்பதை பிரதமர் மோடி நினவாக்கியுள்ளார். அந்த மாநிலத்துக்கு வழங்கிய 370 சிறப்பு பிரிவை ரத்து செய்து இந்தியாவின் ஒரு பகுதியாக காஷ்மீர் இணைந்துள்ளது.
ஆதலால், இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டில் கடந்த காலத்திலும், நிகழ்காலத்திலும் குஜராத்தின், குஜராத் மக்களிடம் பங்கு நினைவுகூரத்தக்கது” எனத் தெரிவித்தார்.