பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட குறைந்தபட்ச கல்வித் தகுதி அவசியமா? என்பது தொடர்பான முடிவை உச்ச நீதிமன்றமே எடுக்க வேண்டும் ஹரியானா மாநில அரசு அறிவித்துள்ளது.
ஹரியானாவில் பஞ்சாயத்து தேர்தலில் பொதுத் தொகுதியில் போட்டியிட குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு, தனி தொகுதியில் போட்டியிட குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு படித்திருக்க வேண்டும் என்று மாநில அரசு அறிவித்தது.
இந்நிலையில், மாநில அரசின் இந்த முடிவு அரசியல்சாசன சட்டத்துக்கு எதிரானது. இதனால் தலித் மக்கள் மற்றும் பெண்கள் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட முடியாத சூழ்நிலை ஏற்படும். 50 சதவீத மக்கள் தேர்தலில் போட்டி யிட முடியாத சூழ்நிலை ஏற்படும் என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தொடுக்கப் பட்டது. இதனை விசாரித்த நீதி மன்றம் மாநில அரசின் உத்தரவுக்கு தற்காலிக தடை விதித்ததுடன், இது தொடர்பாக பதிலளிக்குமாறும் உத்தரவிட்டது.
இந்நிலையில் நேற்று நீதிபதி ஜே.செலமேஸ்வர் தலைமையிலான அமர்வு இந்த வழக்கை மீண்டும் விசாரித்தது. அப்போது இது தொடர்பான முடிவை உச்ச நீதிமன்றமே எடுக்க லாம் என்று ஹரியானா அரசு கூறியுள்ளது. இதையடுத்து வழக்கில் அடுத்த விசாரணையை அக்டோபர் 7-ம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
முன்னதாக செப்டம்பர் 7-ம் தேதி ஹரியானா சட்டப் பேரவையில் பஞ்சாயத்து தேர்தல் தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட குறைந்தபட்ச கல்வித் தகுதி நிர்ணயிக்கப்பட்டது. மேலும் வீடுகளில் கழிப்பறை வசதி வைத்திருப்பவர்கள் மட்டுமே தேர்தலில் போட்டியிட முடியும் என்றும் அறிவிக்கப்பட்டது.