இந்தியா

தேசியக் கல்விக் கொள்கை தொடர்பாக மாநில ஆளுநர்கள் பங்கேற்கும் கருத்தரங்கம் இன்று தொடக்கம்: பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார்

செய்திப்பிரிவு

தேசியக் கல்விக் கொள்கை தொடர்பாக மாநில ஆளுநர்கள் பங்கேற்கும் கருத்தரங்கம் இன்று தொடங்குகிறது. இதில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் உரையாற்றுகின்றனர்.

இந்தியாவில் தற்போது நடைமுறையில் உள்ள கல்விக் கொள்கையானது கடந்த 1986-ம் ஆண்டு வகுக்கப்பட்டது. சுமார் 34 ஆண்டுகளாக தொடரும் இந்தக் கல்விக் கொள்கைக்கு பதிலாக புதிய கல்விக் கொள்கை கொண்டு வர வேண்டும் என நீண்டகாலமாக பாஜக வலியுறுத்தி வந்தது.

இந்த சூழலில், கடந்த 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்த பாஜக, புதிய கல்விக் கொள்கையை வகுப்பதற்காக இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையில் குழு அமைத்தது.

இந்தக் குழுவானது தனது வரைவு அறிக்கையை மத்திய அரசிடம் கடந்த ஆண்டு சமர்ப்பித்தது. இந்நிலையில், இந்த புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை கடந்த ஜூலை மாதம் ஒப்புதல் அளித்தது.

நாடு முழுவதும் 5-ம் வகுப்பு வரை கட்டாய தாய்மொழிக் கல்வி, கல்லூரிகளில் சேர்வதற்காக தேசிய அளவிலான ஒரே நுழைவுத் தேர்வு, எம்.பில் படிப்பு ரத்து, தொழிற்கல்விக்கு கூடுதல் முக்கியத்துவம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இந்தக் கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ளன.

இந்தப் புதிய கல்விக் கொள்கையானது பல்வேறு தரப்பினரிடம் இருந்து வரவேற்பையும், எதிர்ப்பையும் கலவையாக ஈர்த்து வருகிறது.

இந்நிலையில், இந்தக் கல்விக் கொள்கை தொடர்பாக மாநில ஆளுநர்கள் பங்கேற்கும் கருத்தரங்கம் காணொலிக் காட்சி வாயிலாக இன்று தொடங்கவுள்ளது. “உயர்கல்வி முறையை மாற்றுவதில் தேசியக் கல்விக் கொள்கையின் பங்கு” என்ற தலைப்பில் நடைபெறும் இந்தக் கருத்தரங்கில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றுகின்றனர்.

இந்தக் கருத்தரங்கில் அனைத்து மாநில கல்வி அமைச்சர்களும், பல்கலைக்கழக துணைவேந்தர்களும் பங்கேற்கவுள்ளனர்.

SCROLL FOR NEXT