காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்: கோப்புப் படம். 
இந்தியா

கடன் வாங்குங்கள்; மக்களுக்குக் கொடுங்கள்: பொருளாதாரத்தை மீட்பது குறித்து மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் முக்கிய அறிவுரைகள்

பிடிஐ

அதிகமாகக் கடன் பெறுங்கள், மக்களிடம் நேரடியாகப் பணத்தைக் கொடுத்து சந்தையில் தேவையைத் தூண்டிவிடுங்கள். பொருளாதாரத்தை மீட்சிப் பாதைக்குக் கொண்டுவாருங்கள் என்று மத்திய அரசுக்கு காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் அறிவுரைகள் கூறியுள்ளார்.

கடந்த வாரம் தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்ட ஆய்வறிக்கையில் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் 23.9 சதவீதம் அளவுக்கு வீழ்ச்சி அடைந்தது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்ததற்கு மத்திய அரசை காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் ராகுல் காந்தி, ப.சிதம்பரம் உள்ளிட்டோரும், எதிர்க்கட்சித் தலைவர்களும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

கரோனா லாக்டவுன் காலத்தில் நாட்டில் தொழில்கள், வர்த்தகம், சிறு, குறுந்தொழில்கள் அனைத்தும் மூடப்பட்டதால், மக்களிடம் கையில் பணமில்லாமல் இருக்கும். ஆதலால், சந்தையில் தேவையைத் தூண்டும் வகையில் மக்களிடம் நேரடியாகப் பணத்தை வழங்கி, தேவையைத் தூண்டிவிட வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் மத்திய அரசுக்குத் தொடர்ந்து அறிவுரைகள் கூறி வந்தார்.

இந்நிலையில் நாட்டின் பொருளாதாரம் சரிந்துள்ள நிலையில், அதை மீண்டும் மீட்சிப் பாதைக்குக் கொண்டுவருவது குறித்து பல்வேறு ஆலோசனைகளை காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று பகிர்ந்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

மத்திய அரசு பணத்தைத் திரட்டிக்கொள்ள சில வழிமுறைகளைக் கூறுகிறேன்.

  • இந்த ஆண்டு நிதிப் பொறுப்பையும் பட்ஜெட் மேலாண்மையையும் சற்று தளர்த்தி அதிகமாகக் கடன் பெறுங்கள்.
  • அரசு நிறுவனங்கள் மீது மத்திய அரசுக்கு இருக்கும் பங்குகள் விற்பதை விரைவுபடுத்துங்கள்.
  • உலக வங்கி, பன்னாட்டு நிதியம், ஆசிய மேம்பாட்டு வங்கி ஆகியவை அளிப்பதாகத் தெரிவித்துள்ள 6,500 கோடி டாலர் நிதியை பயன்படுத்துங்கள்.
  • கடைசி முயற்சியாக, பற்றாக்குறையின் ஒரு பகுதியைப் பணமாக அச்சிடுங்கள்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியைத் தூண்டிவிடவும், சந்தையில் தேவையை, நுகர்வை அதிகரிக்கவும் சில உறுதியான நடவடிக்கைகள் தேவை.

அவை

  • நாட்டில் உள்ள ஏழைக் குடும்பங்களில் 50 சதவீதம் பேருக்கு நேரடியாகப் பணத்தை வழங்கிடுங்கள்.
  • நாட்டில் உள்ள அனைத்துக் குடும்பத்தினருக்கும் இலவசமாக உணவு தானியத்தை வழங்கிடுங்கள். தேவைப்படுவோர் வாங்கிக் கொள்ளட்டும்.
  • உள்கட்டமைப்புத் திட்டங்களுக்குச் செலவிடுவதை அதிகப்படுத்துங்கள்.
  • உணவு தானிய இருப்பைப் பயன்படுத்தி ஊதியம் வழங்கிடுங்கள். மிகப்பெரிய அளவில் பொதுப் பணிகளைத் தொடங்கிடுங்கள்.
  • வங்கிகளுக்குத் தேவையான மறு முதலீடுகளை வழங்கிடுங்கள்.
  • மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை வழங்குங்கள்.

இவை அனைத்துக்கும் பணம் தேவை. ஆகவே, கடன் பெறுங்கள். தயக்கம் காட்டாதீர்கள்.
இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT