சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் பேட்டியளித்த காட்சி : படம் | ஏஎன்ஐ. 
இந்தியா

அகமதாபாத்தை மினி பாகிஸ்தான் எனக் குறிப்பிடத் துணிச்சல் இருக்கிறதா? மும்பை மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்;: நடிகை கங்கணா ரணாவத்துக்கு சஞ்சய் ராவத் எச்சரிக்கை 

பிடிஐ

மும்பை நகரையும், மகாராஷ்டிராவையும் மினி பாகிஸ்தான் எனக் குறிப்பிடும் நடிகை கங்கணா ரணாவத், அகமதாபாத்தை மினி பாகிஸ்தான் எனச் சொல்ல துணிச்சல் இருக்கிறதா. அவரின் வார்த்தைக்கு மன்னிப்புக் கோர வேண்டும் என்று சிவசேனா கட்சியின் எம்.பி. சஞ்சய் ராவத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பாலிவுடன் நடிகர் சுஷாநத் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் 14-ம் தேதி அவரின் இல்லத்தில் தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கு குறித்து பாலிவுட் பிரபலங்கள் பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை நடிகை கங்கணா ரணாவத் ட்விட்ரில் ஒரு கருத்தைப் பதிவிட்டார்.
அதில், “ சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் எனக்கு வெளிப்படையாக மிரட்டல் விடுத்து என்னை மும்பைக்கு வரக்கூடாது என்கிறார். மும்பை ஏன் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போன்று மாறுகிறது.

மிகப் பெரிய நடிகர் கொல்லப்பட்டுள்ளார். நான் போதை மருந்து கும்பல் குறித்தும், திரையுலகில் மிரட்டுபவர்கள் குறித்தும் பேசுகிறேன்.

எனக்கு மும்பை போலீஸார் மீது நம்பிக்கையில்லை. அவர்கள் எஸ்ஆர்எஸ் புகாரையே புறந்தள்ளிவிட்டார்கள். எனக்குப் பாதுகாப்பில்லை என்பதால் நான் மும்பையையும், பாலிவுட்டையும் வெறுப்பது என அர்த்தமா?” எனக் கூறினார்.

இதற்கு சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் பதில் அளிக்கையில், “மும்பை கங்கணா ரணாவத்துக்கு ஏராளமாகக் கொடுத்திருக்கிறது. ஆனால், மும்பைக்கும், மும்பை போலீஸாருக்கும் அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் அவர் பேசுகிறார். மும்பை போலீஸ் பற்றி அச்சமாக இருந்தால், கங்கணா மும்பைக்கு வரக்கூடாது” எனத் தெரிவித்தார்.

தற்போது இமாச்சலப் பிரதேசத்தில் வசித்துவரும் கங்கணா ரணாவத் நேற்று பதிவிட்ட ட்வீட்டில், “நான் செப்டம்பர் 9-ம் தேதி மும்பை வருகிறேன். என்னைத் தடுக்க யாருக்கு துணிச்சல் இருக்கிறது எனப் பார்க்கலாம்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத்திடம் இன்று நிருபர்கள் கங்கணா ரணாவத் பற்றி கேள்வி எழுப்பினர். அப்போது கங்கணா ரணாவத் மன்னிப்புக் கோர வேண்டுமா எனக் கேள்வி எழுப்பினர்.

அதற்கு சஞ்சய் ராவத் பதில் அளிக்கையில், “மகாராஷ்டிராவிடமும், மும்பையிடமும் கங்கணா ரணாவத் மன்னிப்புக் கோர வேண்டும். முதலில் கங்கணா மன்னிப்புக் கோரட்டும். அதன்பின் அவரை மன்னிப்பது குறித்துப் பேசுவேன். மும்பை மினி பாகிஸ்தான் என்று கங்கணா சொல்கியிருக்கிறார். நான் கேட்கிறேன், குஜராத்தின் அகமதாபாத்தை மினி பாகிஸ்தான் என்று சொல்வதற்கு கங்கணாவுக்குத் துணிச்சல் இருக்கிறதா?

மும்பையில் வாழ்பவர்கள், பணியாற்றுபவர்கள், மும்பையைப் பற்றியும் மகாராஷ்டிரா பற்றியும் மராத்தி மக்கள் பற்றியும் தவறாகப் பேசினால், முதலில் மன்னிப்புக் கேளுங்கள் என்றுதான் நான் முதலில் கூறுவேன். அதுமட்டுமல்லாமல் மகாராஷ்டிரா போலீஸ் பற்றி அவதூறாக கங்கணா பேசியுள்ளார். அதற்கு அவர் மீது அரசு நடவடிக்கை எடுக்கும்” எனத் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT