சாமானியர்களின் கைகளுக்கும் ஸ்மார்ட்போன்கள் சாத்தியமாக வேண்டும் என்ற நோக்கத்தில் ‘ஃப்ரீடம் 251 செல்போன்’ என்ற திட்டம் கடந்த 2016-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் 251 ரூபாய் செலுத்தி முன்பதிவு செய்யும் ஒவ்வொருவருக்கும் ஒரு ஸ்மார்ட்போன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டத்தில் செல்போன் பெறுவதற்காக 7.5 கோடி பேர் போட்டிபோட்டுக் கொண்டு முன்பதிவு செய்தனர். ஆனால், இவர்களில் இதுவரை 70 ஆயிரம் பேருக்கு மட்டுமே செல்போன்கள் வழங்கப்பட்டிருப்பதாக தகவலறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரியவந்திருக்கிறது.
பரங்கிப்பேட்டையைச் சேர்ந்த ஏ.பி.கலீல் அகமது பாகவி, குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கத்தின் பொதுச் செயலாளராக இருக்கிறார். இவர் ‘ஃப்ரீடம் 251 செல்போன்’ திட்டம் குறித்த தகவல்களைப் பெறுவதற்காக கடந்த மார்ச் மாதம் பிரதமர் அலுவலகத்துக்கு தகவலறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கடிதம் எழுதினார்.
அந்தக் கடிதத்தில், ‘ஃப்ரீடம் 251 செல்போன் திட்டத்தின் மூலம் 251 ரூபாய்க்கு செல்போன்களை தயாரித்து வழங்குவதாகச் சொன்ன ‘ரிங்கிங் பெல்ஸ் பிரைவேட் லிமிடெட் - நொய்டா’ நிறுவனத்தின் தற்போதைய நிலை என்ன? அந்த நிறுவனத்தினர் இதுவரை யாருக்கெல்லாம் 251 ரூபாய்க்கு செல்போன்களை தயாரித்து அளித்திருக்கிறார்கள்? அந்த நிறுவனத்தால் இதுவரை முன்பதிவு செய்தவர்களுக்கு வழங்கப்பட்ட செல்போன்கள் எத்தனை? சொன்னபடி செல்போன்களை தயாரித்துக் கொடுக்கவில்லை எனில் இந்த மோசடி குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்ற கேள்விகளைக் கேட்டிருந்தார் கலீல்.
இதற்கு பதிலளித்த மின்னணு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம், ‘ஃப்ரீடம் 251 செல்போன் திட்டத்தின் மூலம் செல்போன் பெறுவதற்காக முன்பதிவு செய்திருந்த 7.5 கோடி பேரில் முதல் கட்டமாக 2016-ம் ஆண்டு ஜூலை 8 முதல் 15-ம் தேதிக்குள் 5,000 பேருக்கு மட்டும் செல்போன்கள் வழங்கப்பட்டன. செல்போன் குறித்த நிறை குறைகள் குறித்து பொதுமக்களிடம் இருந்து பின்னூட்டம் பெறுவதற்காக நாடு முழுவதும் இந்த 5,000 செல்போன்கள் விநியோகம் செய்யப்பட்டன. இதையடுத்து இரண்டாம் கட்டமாக 2016 ஜூலை 20 முதல் ஆகஸ்ட் 1-ம் தேதி வரை மேலும் 65 ஆயிரம் செல்போன்கள் முன்பதிவாளர்களுக்கு நாடு முழுவதும் விநியோகம் செய்யப்பட்டன’ என்று தெரிவித்திருக்கிறது. திட்டத்தின் 2016-ம் ஆண்டு நிலவரத்தை மட்டுமே தெரிவித்திருக்கும் அமைச்சகம், அதன் பிறகு திட்டத்தின் நிலை என்ன என்பது குறித்து எந்தத் தகவலையும் தெரிவிக்கவில்லை.
இதுகுறித்து நம்மிடம் பேசிய கலீல் அகமது பாகவி, “இந்தத் திட்டத்தை அறிமுகம் செய்தபோது பிரதமரின் படத்தைப் போட்டு பிரமாதமாய் விளம்பரம் செய்தார்கள். பிரதமர் மோடி இந்தத் திட்டத்தின் விளம்பரத் தூதர் போலவே சித்தரிக்கப்பட்டார். அப்போதைய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் இந்தத் திட்டம் குறித்து விளம்பரம் செய்தார். இப்படியெல்லாம் பிரகடனம் செய்யப்பட்ட இந்தத் திட்டம் அறிவித்த வேகத்திலேயே அடங்கிப் போனது. அதனால் இதில் ஏதோ குழப்பம் நடந்திருப்பதாக எனக்குத் தோன்றியது.
எனவே, திட்டத்தின் தற்போதைய நிலை குறித்து தகவல்களைக் கேட்டு தகவலறியும் உரிமைச் சட்டத்தில் கடந்த மார்ச் 9-ம் தேதி ஆன்லைனில் மனு அனுப்பினேன். அந்த மனு மார்ச் 11 -ம் தேதி பிரதமர் அலுவலகத்திலிருந்து தொலைத் தொடர்புத்துறைக்கு அனுப்பப்பட்டது. அங்கிருந்து மார்ச் 17-ம் தேதி, தொலைத் தொடர்புத் துறை டைரக்டர் ஜெனரல் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டது. அங்கிருந்து மீண்டும் அதே தேதியில் தொலைத் தொடர்புத் துறைக்கு மீண்டும் அனுப்பப்பட்டது.
அதன் பிறகு, ஃப்ரீடம் 251 செல்போன் தயாரித்து அளிக்க ஒப்பந்தமாகி இருந்த கம்பெனி பற்றிய விவரங்களையும் அதன் பதிவு எண்ணையும் கேட்டு தொலைத் தொடர்புத் துறை எனக்குக் கடிதம் எழுதியது. இந்த விவரத்தைக் கேட்டு மட்டும் ஒன்றுக்கு மூன்று முறை எனக்கு திரும்பத் திரும்பக் கடிதம் அனுப்பினார்கள். இது என்னுடைய வேலை இல்லை என்றாலும் அவர்கள் கேட்ட கம்பெனி விவரத்தை திரட்டிக் கொடுத்தேன். அதை வாங்கிவைத்துக் கொண்டு, ‘இதுபற்றிய விவரம் எதுவும் தங்களிடம் இல்லை’ என்று சொல்லி மனுவை மின்னணு தகவல் தொழில்நுட்பத் துறைக்கு மார்ச் 31-ம் தேதி அனுப்பியது தொலைத் தொடர்புத் துறை.
இதன் பிறகும் எனது மனுவுக்கு உரிய பதில் கிடைக்கவில்லை. இது தொடர்பாக கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் கடந்து ஜூன் 30-ல் எனக்குப் பதில் கொடுத்த மின்னணு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம், ஃப்ரீடம் 251 செல்போன் திட்டத்தின் மூலம் இரண்டு கட்டங்களாக இதுவரை 70 ஆயிரம் செல்போன்கள் வழங்கப்பட்டதாகத் தகவல் தந்தது. இதுகூட 2016-ம் ஆண்டு நிலவரம்தான். திட்டத்தின் தற்போதைய நிலவரம் குறித்து அவர்கள் எந்த பதிலும் தரவில்லை.
ஏழரைக் கோடி பேர் பணம் செலுத்தி முன்பதிவு செய்திருக்கும் நிலையில் வெறும் 70 ஆயிரம் பேருக்கு மட்டுமே செல்போன்கள் வழங்கப்பட்டதாகச் சொல்கிறார்கள். அறிவித்தபடி திட்டத்தைச் செயல்படுத்தி இருந்தால் இந்நேரம் முன் பதிவு செய்த அத்தனை பேருக்கும் செல்போன்கள் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அப்படி நடக்காதது இந்தத் திட்டம் ஒரு மோசடியான திட்டமோ என எண்ணத் தோன்றுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் திட்டத்தின் இப்போதைய நிலை குறித்து எனக்கு உரிய பதிலைத் தராதது சந்தேகத்தை மேலும் அதிகரிக்கிறது. எனவே, அதிகாரிகள் அளித்திருக்கும் பதில் எனக்கு திருப்தி இல்லாததால் இதை எதிர்த்து அப்பீல் மனுத்தாக்கல் செய்யப் போகிறேன்” என்றார்.