ஒரே பதவி வகித்த முன்னாள் ராணுவ வீரர்களுக்கு ஒரே ஓய்வூதியம் திட்டம் குறித்து மத்திய அரசு இன்று அறிவிக்கப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
டெல்லியில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். ஆலோசனைக் கூட்டத்தில், 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஓய்வூதியம் மாற்றப்படும் விதமாக இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் வரைவு முன்மொழிவை அரசு தயாரித்திருப்பதாக உள் வட்டார செய்திகள் தெரிவிக்கின்றன.
இதன் அடிப்படையில் மத்திய அரசு ஒரே பதவி ஒரே ஓய்வூதிய திட்டம் குறித்த முக்கிய அறிவிப்பை இன்று வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை என்பதை முன்னாள் ராணுவ வீரர்கள் ஏற்றுக் கொள்ள மறுத்துள்ளனர்.
இது குறித்து ஜந்தர் மந்தரில் முன்னாள் மேஜர் ஜெனரல் சத்பீர் சிங் கூறும்போது, "2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஓய்வூதியம் மாற்றி அமைக்கப்படும் திட்டத்துக்கு ஒப்புக் கொள்கிறோம், ஆனால் அதற்கு மேலான ஆண்டுகளை ஏற்க முடியாத" என்றார்.
அதேபோல், இத்திட்டத்தை 2013 ஆம் ஆண்டு முதல் செயல்பாட்டுக்கு கொண்டு வந்து, நிலுவைத்தொகை வழங்கவும் அதை நான்கு தவணைகளாக வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும், விதவைகள் மற்றும் 70 வயதிற்கு மேற்பட்ட முன்னாள் வீரர்களுக்கு முதலில் வழங்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.