ஏழைகள் உட்பட அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய வளர்ச்சியைக் காட்டும் 38 நாடுகள் பட்டியலில் இந்தியா மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதாக உலகப் பொருளாதார கூட்டமைப்பின் ஆய்றிக்கை தெரிவித்துள்ளது.
அதாவது, அனைத்து தரப்பினருக்குமான வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் பொருளாதார வளர்ச்சிக்கான முயற்சிகளை பல்வேறு நாடுகளை வைத்து உலகப் பொருளாதார கூட்டமைப்பு கடந்த 2 ஆண்டுகளாக ஆய்வு மேற்கொண்டது.
அரசியல் கொள்கைகள் மற்றும் வர்த்தகத்தில் இந்தியாவின் தரநிலை உயர்ந்த இடத்தில் இருந்தாலும், நிதி விநியோகத்தில் 38 நாடுகளில் இந்தியா 37-வது இடத்திலும், வரிவிதிப்புக் குறியீட்டில் 32-வது இடத்திலும், சமூகப் பாதுகாப்பில் 36-வது இடத்திலும் இந்தியா பின்னடைவு கண்டுள்ளது.
பொருளாதார கூட்டமைப்பு தனது ஆய்றிக்கையில் கூறும்போது, "நாட்டின் தலைவர்கள் கடைபிடிக்கும் பொருளாதாரக் கொள்கைகள் வளர்ச்சி சார்ந்ததாகவும், தொழிலாளர் நலன் சார்ந்ததாகவும் இருக்க வேண்டும் என்பதே எங்கள் செய்தி" என்று தெரிவித்துள்ளது.
அதேபோல் இந்தியா கவனம் செலுத்த வேண்டிய இன்னொரு துறை, சிறுதொழில் வளர்ச்சி. இந்தப் பிரிவில் இந்தியா 38-வதாக கடைசி இடத்தில் உள்ளது என்கிறது இந்த அறிக்கை.
வர்த்தகம் மற்றும் அரசியல் கொள்கைகள் பிரிவில் இந்தியா 12-வது இடம் வகிக்கிறது. அதேபோல் பண முதலீடுகள் பெரும்பாலும் உற்பத்திப் பயன்களுக்காகச் செல்வதில் இந்தியா 11-வது இடம் பிடித்துள்ளது.
உலகப் பொருளாதார கூட்டமைப்பு இந்த வகையில் தரம் பிரித்திருப்பது இதுவே முதல் முறை, குறிப்பாக, தனிநபர் வருவாயை வைத்து பல்வேறு நாடுகளின் வளர்ச்சி நிலையை தரம்பிரித்துள்ளது முதல் முறை என்று கூறப்படுகிறது.
கடந்த 2 ஆண்டுகளாக உலகப் பொருளாதார கூட்டமைப்பு இந்த ஆய்வை நடத்தியது. அதாவது நாடுகள் தங்களின் வளர்ச்சிக்காக வரையும் திட்டங்களை அடையாளப்படுத்தியதோடு, திட்டங்களை அமல் படுத்துவதில் எவ்வளவு வெற்றி கண்டுள்ளது என்ற அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.