கரோனா காலத்தில் நாடாளுமன்றத்தில் மோடி கேள்விகளுக்கு பதிலளிக்க மட்டார், ஆனால் நீட் தேர்வில் மாணவர்கள் மட்டும் பதிலளிக்க வேண்டுமா என ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைஸி கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்ற மழைகாலக் கூட்டத்தொடரில் கேள்வி நேரம் இடம் பெறாது என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் வரும் 14-ம் தேதி தொடங்கி வார விடுமுறையின்றி, அக்டோபர் 1-ம் தேதிவரை நடக்கிறது. சனி, ஞாயிற்றுக் கிழமைகளிலும் இரு அவைகளும் இயங்கும்.
கரோனா வைரஸ் சூழலைக் கருத்தில் கொண்டு நாடாளுமன்றக் கூட்டம் காலை 9 மணி முதல் நண்பகல் 1 மணி வரையிலும், பின்னர் மாலை 3 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் நடக்கும். கூட்டத் தொடரில் கேள்வி நேரம் இல்லை. தனிநபர் மசோதாவும் இல்லை.
கேள்வி நேரத்துக்குப் பிந்தைய நேரமும் கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்படும் என்று மக்களவை, மாநிலங்களவைச் செயலாளர்கள் அறிவித்துள்ளனர்.
இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. கேள்வி நேரத்தை ரத்து செய்வது ஜனநாயகத்திற்கும் அரசியல் சட்டத்திற்கும் எதிரானது என எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன. எனினும் நாடாளுமன்ற மழைகாலக் கூட்டத்தொடரில் கேள்வி நேரம் இடம் பெறாது என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இந்தநிலையில் மத்திய அரசின் முடிவுக்கு ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைஸி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைஸி கூறியதாவது:
‘‘கரோனா தொற்றை காரணம் காட்டி நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தை ரத்து செய்து விட்டனர். கேள்வி நேரத்தின்போது பிரதமர் மோடி கேள்விக்கு பதில் சொல்ல மாவட்டார். ஆனால் மிக மோசமான தொற்று சூழலில் ஜேஇஇ மற்றும் நீட் தேர்வுகளில் கேட்கப்படும் கேள்விக்கு மட்டும் மாணவர்கள் பதிலளிக்க வேண்டும்.’’ எனக் கூறியுள்ளார்.