திருப்பதி பிரம்மோற்சவத்தின் 4-ம் நாளான நேற்று கற்பகவிருட்ச வாகனத்தில் உற்சவ மூர்த்திகள் திருவீதி உலா வந்தனர். இரவு சர்வ பூபாள வாகனத்தில் பவனி வந்து அருள் பாலித்தனர்.
திருப்பதி பிரம்மோற்சவம் கடந்த 16-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முதல் நாள் பெரிய சேஷ வாகனத்தில் பவனி வந்த மலையப்பர், இரண்டாம் நாள் காலை, சின்ன சேஷ வாகனத்திலும், இரவு அன்ன வாகனத்திலும் உலா வந்தார். இதையடுத்து 3-ம் நாள் காலை சிம்ம வாகனத்திலும், இரவு முத்துப் பல்லக்கு வாகனத்திலும் எழுந்தருளினார்.
இந்நிலையில் 4-ம் நாளான நேற்று காலை, ஸ்ரீதேவி, பூதேவி சமேதமாக மலையப்ப சுவாமி கற்பகவிருட்ச வாகனத்தில் திருவீதி உலா வந்தார். கோயில் எதிரே உள்ள வாகன மண்டபத்தில் காலை 8 மணிக்கு தொடங்கிய திருவீதி உலா 10 மணிக்கு நிறைவு பெற்றது.
மாட வீதிகளில் வாகன சேவையை காண பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நேற்று புரட்டாசி முதல் சனிக்கிழமை என்பதால் பக்தர்கள் தொடர்ந்து குவிந்த வண்ணம் இருந்தனர். இரவு சர்வ பூபாள வாகனத்தில் உற்சவர்கள் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
இன்று கருட சேவை
பிரம்மோற்சவத்தில் மிக முக்கிய வாகனமாக கருதப்படும் கருட வாகன சேவை இன்று இரவு 8 மணிக்கு தொடங்க உள்ளது. விடுமுறை நாள் என்பதால் உள்ளூர்வாசிகள் அதிக அளவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் 5 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 512 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. 24 மணி நேரமும் மலைவழிப் பாதை திறந்திருக்கும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
இதனிடையே சனிக்கிழமை நள்ளிரவு முதல் திங்கள்கிழமை காலை 6 மணி வரை திருப்பதியில் இருந்து திருமலைக்கு மோட்டார் சைக்கிள்களில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கருட சேவையின்போது விபத்துகளை தவிர்ப்பதற்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.