இந்தியா

பெண்களுக்கு ஊசி போடும் மனநோயாளியை பிடிக்க திணறும் போலீஸார்: தகவல் கொடுப்போருக்கு ஆந்திர போலீஸார் ரூ. 1 லட்ச‌ம் பரிசு அறிவிப்பு

என்.மகேஷ் குமார்

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பெண்கள், மாணவிகளை குறிவைத்து `ஊசி’ போடும் மனநோயாளியை பிடிக்க போலீஸார் திணறி வருகின்றனர்.

இவனைப் பற்றி தகவல் தெரிவிப்போருக்கு ரூ. 1 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என காவல்துறை அறிவித்துள்ளது.

மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பாலகொள்ளு, வீரவசரம், பெனுகொண்டா, உண்டி, அனந்தபல்லி பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக அதிகாலை முதல் காலை 10 மணிக்குள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவிகள், வீடுகளில் கோலம் போடும் பெண்களை குறி வைத்து பைக்கில் கைக்குட்டை மற்றும் அவ்வப்போது ஹெல்மெட் அணிந்து முகத்தை மூடி வரும் மர்ம நபர் ஒருவர், பெண்களிடம் பேச்சு கொடுத்தபடியே , திடீரென தான் கொண்டு வந்த `ஊசி’யால் மயக்க மருந்தை செலுத்தி விட்டு அங்கிருந்து தப்பி விடுவதாக கூறப்படுகிறது. இதுவரை 25 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை 6 வயது சிறுவனுக்கும் `ஊசி’ போட்டு தப்பி உள்ளனர்.

பெண்களை இதுவரை சிலர் கத்தி போன்ற ஆயுதங்களாலும், ஆசிட் போன்றவற்றாலும் தாக்கி வந்ததாகவும், இதுபோன்ற `ஊசி’யால் தாக்குவது இதுவே முதன்முறை எனவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

ஆண்களுக்கும் ஊசி

ஊசி போடும் மர்ம நபரால் பெண்கள் மட்டுமின்றி, தற்போது மேற்கு கோதாவரி மாவட்டத்தில் ஆண்களும் பயத்தில் உறைந்து போயுள்ளனர். நேற்று காலை பீமாவரம் மண்டலம், கொப்பாடு என்ற பகுதியில் பைக்கில் வந்த நபரிடம், மர்ம நபர் ஒருவர் லிப்ட் கேட்டுள்ளார். அதன் பின்னர் பைக்கில் ஏறி சிறிது தூரம் சென்ற பின்னர், மர்ம நபர் திடீரென தான் கொண்டு வந்த ஊசியை முன்னால் உட்கார்ந்து பைக் ஓட்டி செல்லும் நபருக்கு செலுத்தினார். இதனால் பயந்து போய் பைக்கை நிறுத்தியதால், மர்ம நபர் இறங்கி தப்பி தலைமறைவாகி விட்டார்.

பாதிக்கப்பட்டவர்களிடம் ரத்த மாதிரி எடுத்து, அதனை மருத்துவ பரிசோதனைக்காக ஹைதராபாத் மற்றும் விஜயவாடாவுக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர்.

அது ஒரு வகையான மயக்க மருந்து என்றும், இதனால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது எனவும் மருத்துவ அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.

எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட மனநோயாளிகள் யாரேனும் சிலர் இதுபோன்ற சில்மிஷங்களில் ஈடுபடுகிறார்களோ எனும் சந்தேக மும் போலீஸாருக்கு எழுந்தது. ஆனால், மர்ம நபர் செலுத்தும் ஊசிகளில் எந்தவித பாக்டீரியாவும் இல்லை என மருத்துவ ரீதியாக நிரூபணம் செய்யப்பட்டுள்ளது. இதனால் போலீஸாரும், பாதிக்கப்பட்டோரும் நிம்மதி அடைந்துள்ளனர்.

மர்ம நபரால் பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவித்த அடையாளங்களை வைத்து போலீஸார் மர்ம நபரின் வரைபடத்தை வெளியிட்டுள்ளனர். அவரைப் பற்றி தகவல் தெரிவிப்போருக்கு ரூ. 1 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளனர்.

இவரை பிடிக்க 230 பேர் கொண்ட 45 போலீஸ் குழுக்கள் கடந்த ஒரு வாரமாக தேடி வரு கின்றன. ஆனால் இதுவரை எந்த வித தவலும் கிடைக்கவில்லை. இதனால் அங்கு கூடுதலாக 15 சோதனைச் சாவடிகள் அமைக் கப்பட்டு 24 மணி நேரமும் மர்ம நபரை தேடி வருகின்றனர்.

‘பல்சர்’ பைக் மூலம் வந்து `ஊசி’ போடுவதால் அந்த மாவட்டத்தில் பல்சர் பைக் வைத்திருப்போர் குறித்து முழு விவரங்களும் சேகரித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும், மருத்துவரின் பரிந்துரையின்றி, ஊசிகளையோ அல்லது எந்த வித மருந்துகளையோ விற்பனை செய்யக் கூடாது என மருந்து கடை உரிமையாளர்களை போலீஸார் எச்சரித்து உள்ளனர்.

மயக்க ஊசி போடும் நபர், பெண்களிடம் உள்ள நகைகளை திருடாததாலும், பாலியல் பலாத்காரம் போன்ற செயல்களில் ஈடுபடாத காரணத்தாலும், இவர் கண்டிப்பாக ஒரு மனநோயாளியாகத்தான் இருக்க வேண்டுமென மேற்கு கோதாவரி மாவட்ட எஸ்.பி பாஸ்கர் பூஷன் தெரிவித்துள்ளார்.

இதுவரை அந்த மர்ம மனநோயாளி பிடிபடாததால், பொது மக்கள் பெரும் பீதியில் உள்ளனர். குறிப்பாக பெண்கள் வெளியில் நடமாடவே அச்சப்படும் சூழ்நிலை இந்த மாவட்டத்தில் ஏற்பட்டுள்ளது.

ஊசி போடும் `சைக்கோ’ பிடிபட்டானா?

பீமாவரத்தில் மாவட்ட எஸ்.பி. பாஸ்கர் பூஷன் நேற்று கூறும்போது, "மனநோயாளியாக கருதப்படும் நபர் ஊசி போட்டதாக கடந்த 26-ம் தேதிக்கு பின்னர் வரும் செய்திகள் பொய்யானவை. சிலர் வீண் விளம்பரத்துக்காக புகார் அளித்து வருகின்றனர். விரைவில் அந்த மன நோயாளியை பிடிப்போம்" என கூறினார்.

மாவட்ட எஸ்.பி. 26-ம் தேதிக்கு பின்னர் நடக்கும் இதுபோன்ற சம்பவங்கள் அனைத்தும் பொய் என கூறுவதால் மனநோயாளியை போலீஸார் கைது செய்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. சமீபத்தில் ராஜமுந்திரியில் உள்ள ஒரு டிராவல்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் ரவி குமார் என்பவரை போலீஸார் கைது செய்தனர் என பெயர் வெளியிட விரும்பாத ஒரு போலீஸ் அதிகாரி கூறினார். ஆனால் அடுத்த‌ சில மணி நேரத்தில், பேரூரு என்கிற இடத்தில் ஒரு பெண்ணுக்கு ஊசி போட்டு மர்ம நபர் ஒருவர் தப்பிவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்த பெண் தற்போது ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் மன நோயாளி போலீஸில் சிக்கினானா, இல்லையா என்பதில் குழப்பம் நீடிக்கிறது.

கம்ப்யூட்டர் வரைபடம் தயாரிப்பது எப்படி?

குற்றவாளிகளின் புகைப்படத்தை தயாரிக்க இந்தியா முழுவதும் `எம்ஓபி' (Modus Operandi Bureau) என்ற மென்பொருளை பயன்படுத்துகின்றனர். இதில் மனிதனின் ஆயிரம் வகைகளிலான தலைமுடி ஸ்டைல்கள், 700-வகையான கண்கள், 300-க்கும் மேற்பட்ட மீசை மற்றும் 500-க்கும் மேற்பட்ட மூக்கு ஸ்டைல்கள், நெற்றி, கன்னம், தாடை, காது, புருவம், வாய், உதடு என தனித்தனியாக படங்கள் இருக்கும்.

தேடப்படும் நபரின் உருவ அமைப்புகள் ஏற்கெனவே வரையப்பட்டிருக்கும் பாகங்களில் ஏதாவது ஒன்றுடன் நிச்சயம் பொருந்தும். எனவே குற்றவாளியை நேரில் பார்த்த நபரை வரவழைத்து அவர் கூறும் தகவலை வைத்து அதற்கு ஏற்றார்போல இருக்கும் பாகங்களை சேர்த்து பார்த்தால் ஓரளவு குற்றவாளியின் உருவத்தை கண்டுபிடிக்க முடியும். அனைத்து மாவட்டங்களிலும் உள்ள குற்ற ஆவணக் காப்பகங்களிலும் சில காவல் ஆணையர் அலுவலகங்களிலும் இதற்கென தனி அலுவலகம் உள்ளது. இதை `போர்ட்ரெய்ட்' அலுவலகம் என்று அழைப்பார்கள். கம்ப்யூட்டரில் படம் வரைவதற்காக பயிற்சி பெற்ற நபர்கள் இங்கு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT