‘நாடாளுமன்றத்தை எப்படி நடத்துவது என்று உச்ச நீதிமன்றம் அறிவுரை வழங்க முடியாது. ஜனநாயகத்தில் விதிக் கப்பட்டுள்ள ‘லட்சுமணன் கோட்டை’ தாண்ட முடியாது’ என்று கூறி, பொதுநல மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
தேசிய மாண்புகளை மீட்டெ டுக்கும் அமைப்பு என்ற பெயரில் பொதுநல மனு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டது. அதில், நாடாளுமன்றத்தில் அமளி, வெளிநடப்பு, கூச்சல் குழப்பம் ஆகியவற்றால் மக்கள் பணம் வீணடிக்கப்படுகிறது. நாடாளுமன்றம் செயல்பட ஒரு நிமிடத்திற்கு ரூ.2.5 லட்சம் செலவாகிறது. கடந்த ஆறு கூட்டத் தொடர்களில் 2,162 மணி நேரம் கூச்சல், குழப்பம், அமளியால் வீணடிக்கப்பட்டுள்ளது. எனவே, நாடாளுமன்றத்தை எப்படி நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் விதிமுறைகளை வகுத்து உத்தரவிட வேண்டும்’ என்று கோரப்பட்டிருந்தது.
இம்மனு தலைமை நீதிபதி எச்.எல்.தத்து, நீதிபதி அமிதவா ராய் முன்பாக விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் வாதாடிக் கொண்டிருந்தார்.
அப்போது, தலைமை நீதிபதி தத்து, ‘முதலில் உங்கள் வீட்டை சுத்தமாக வைத்திருக்கிறீர்களா? உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்ற முறையில், நீதிமன்றங்கள் எந்த அளவுக்கு முறையாக நடைபெற அனுமதிக்கப்படுகின்றன என்பது எனக்கு தெரியும். நீங்கள் முதலில் உங்கள் வீட்டை சுத்தம் செய்யுங்கள்’ என்றார். சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெறும் சம்பவங்களை சுட்டிக் காட்டும் வகையில் நீதிபதியின் கருத்து அமைந்திருந்தது.
மேலும், ‘நாடாளுமன்றத்தை நடத்துவது எப்படி என்பது சபாநாயகருக்கு தெரியும். நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அனுபவம் மிக்கவர்கள்; அறிவுமிக்கவர்கள். அவர்களது பொறுப்பு என்ன என்பது அவர்களுக்கு தெரியும்.
ஜனநாயகத்தில் நாடாளு மன்றத்தை எப்படி நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுரை கூற முடியாது. அதைச் செய்யவும் கூடாது. அவர்களை கண்காணிப்பது உச்ச நீதிமன்றத்தின் வேலை அல்ல. அப்படி செய்தால் அது அதிகார எல்லை மீறிய செயலாக அமையும். உச்ச நீதிமன்றத்துக்கு இருக்கும் ‘லட்சுமணன் கோட்டை’ தாண்டக் கூடாது’ என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.