இந்தியா

கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளிலிருந்து தமிழகத்துக்கு கூடுதல் தண்ணீர் திறப்பு: நீர்வளத்துறை அலுவலகம் மீது கன்னட அமைப்பினர் தாக்குதல்

இரா.வினோத்

கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி அணை களில் இருந்து தமிழகத்துக்கு நொடிக்கு 8 ஆயிரம் கன அடிநீர் திறக்கப்பட்டுள்ளது. இதனைக் கண்டித்து கன்னட அமைப்பினர் மற்றும் அம்மாநில விவசாயிகள் மைசூருவில் உள்ள நீர்வளத்துறை தலைமை பொறியாளர் அலுவலகத் தின் மீது தாக்குதல் நடத்தினர்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத் தில் ‘காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பின்படி தமிழகத்துக்கு வழங்க வேண்டிய‌ காவிரி நீரை கர்நாடகா திறந்துவிட மறுக்கிறது. எனவே நீதிமன்ற உத்தரவுபடி உரிய நீரை திறந்துவிட க‌ர்நாடக அரசை வலியுறுத்த வேண்டும்' என குறிப்பிட்டு இருந்தார்.

இதற்கு கர்நாடக மாநில தலைமை செயலர் கவுஷிக் முகர்ஜி, க‌ர்நாடகாவில் கடும் வறட்சி நிலவு வதால் தமிழகத்துக்கு காவிரி நீரை தற்போது திறக்க முடியாது என பதில் கடிதம் எழுதி இருந்தார். இதனை ஏற்க மறுத்த தமிழக அரசு, நீதிமன்ற உத்தரவின்படி வறட்சி காலத்தில் வழங்க வேண்டிய காவிரி நீரை தமிழகத்துக்கு வழங்க வேண்டும் என மீண்டும் கர்நாடகா வுக்கு கடிதம் எழுதியது.

இதையடுத்து நேற்று முன்தினம் கபினி அணையில் இருந்து தமிழகத்துக்கு நொடிக்கு 4 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டது. இதனை கண்டித்து கர்நாடக மாநில விவசாயிகள் மற்றும் கன்னட அமைப்பினர் போராட்டத்தில் ஈடு பட்ட நிலையில், நேற்று கிருஷ்ண ராஜசாகர் அணையில் இருந்து தமிழகத்துக்கு நொடிக்கு 4,100 கன அடி நீர் திறக்கப்பட்டது. இரு அணை களில் இருந்தும் த‌மிழகத்துக்கு நொடிக்கு 8,100 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த நீர் பிலிகுண்டுலு வழியாக ஒகேனேக்கலை வந்தடைந்தது.

கன்னட அமைப்பினர் தாக்குதல்

தமிழகத்துக்கு காவிரி நீர் திறக் கப்பட்டுள்ளதை கண்டித்து கர்நாடக மாநில‌ விவசாயிகள் மைசூரு, மண்டியா மாவட்டங் களில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெங்களூரு- மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்னப்பட்னா, மத்தூர் ஆகிய இடங்களில் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.

கர்நாடக கரும்பு விவசாயிகள் சங்கம், காவிரி நதிநீர் மீட்பு குழு மற்றும் கன்னட ரக் ஷன வேதிகே, நவநிர்மாண் சேனா உள்ளிட்ட கன்னட அமைப்பினர் மைசூருவில் உள்ள காவிரி நீர் நிர்வாக ஆணை யத்தை நேற்று முற்றுகையிட்டனர்.

நீர்வளத்துறை தலைமை பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்ட போராட்டக்காரர் கள், 'தமிழகத்துக்கு திறக்கப்பட் டுள்ள காவிரி நீரை உடனடியாக நிறுத்த வேண்டும்' என கோஷம் எழுப்பினர். மேலும் தலைமை பொறியாளர் பி.சிவகுமாரை சந்திக்கவும் முயற்சி செய்தனர்.

அங்கு பதற்றம் ஏற்பட்டதால் நீர்வளத்துறை அதிகாரிகள், 'தலைமை பொறியாளர் அலுவல கத்தில் இல்லை' எனக்கூறி அலு வலகத்தை உள்பக்கமாக பூட்டிக் கொண்டனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் மற்றும் கன்னட அமைப்பினர் தலைமை பொறியா ளர் அலுவலகத்தில் நுழைந்து கதவு மற்றும் ஜன்னல்களை அடித்து நொறுக்கினர். மேலும் அங்கு இருந்த மேசை, நாற்காலி மற்றும் கோப்புகளை தூக்கி வீசினர். இதையடுத்து போலீஸார் கன்னட அமைப்பினர் மீது தடியடி நடத்தி, அவர்களைக் கலைத்தனர்.

போராட்டம் தொடரும்

இதுதொடர்பாக கர்நாடக கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் குருபுர் சாந்தகுமார் கூறியதாவது:

கர்நாடகாவில் வரலாறு காணாத வறட்சி நிலவுவதால் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இங் குள்ள விவசாயிகள் குடிநீருக்கும் பாசனத்துக்கும் தவித்து வருகிறார் கள். இந்த நிலையில் தமிழகத்துக்கு நீர் திறந்து விடுவதை ஏற்க முடியாது. எனவே கர்நாடக அரசு தமிழகத்துக்கு காவிரி நீர் திறந்து விட்டுள்ளதை நிறுத்த வேண்டும். இல்லாவிடில் மாநிலம் முழுவதும் உள்ள விவசாயிகளை திரட்டி கிருஷ்ணராஜசாகர், கபினி அணை களை எங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவோம்''என்றார்.

SCROLL FOR NEXT